Saturday, March 10, 2007

வானொலிக்கால நினைவுகள் - 5


காவலூர் இராசதுரை அண்ணர் அக்காலத்தில் பிரபலமான 'லிப்டன் லாவொஜி' என்ற தேயிலைக்கான விளம்பர நிகழ்ச்சியாக 'துப்பறியும் லாவோஜி' என்ற ஒரு தொடர்நாடகத்தை எழுதி வந்தார். அதில் முக்கிய பாத்திரத்தில் 'பண்டா' ஆறுமுகம் நடித்தார். ( பண்டா என்பது அவர் நடித்த புகழ்பெற்ற பாத்திரத்தின் பெயர்) அதில் என்னையும் நடிக்க வைத்தார்.

கூட நடித்தவர்களில் என் ஞாபகத்திற்க வருபவர்கள், பாடகிகளான இரண்டு சகோதரிகள். மூத்தவர் கோகிலவர்த்தனி சுப்பிரமணியம் (சிவராஜா) பின்னாளில் அறிவிப்பாளராகவும் இருந்தவர்.– தங்கை சுபத்திரா சுப்பிரமணியம் (சந்திரமோகன்) பல மெல்லிசைப்பாடல்களை அக்காவுடன் பாடியவர்.

இத்தொடரைத் தயாரித்தது International Advertising Services என்ற வெளிநாட்டு விளம்பர நிறுவனம் - நடித்து முடிந்தவுடன் 'டாண்' என்று பணம் தருவார்கள். இலங்கை வானொலியின் தேர்வு செய்யப்பட்ட கலைஞனாக நான் வருவதற்கு முன்னரே வர்த்தக சேவையில் நடிக்கவும் அதற்கான ஊதியம்; பெறவும் வைத்தார் காவலூரார். என் வானொலிப்பிரவேசத்திற்கு கால்கோள் இட்டவர்களில் மிகமுக்கியமான ஒருவர், காவலூர் இராசதுரை அண்ணர்தான்.

தற்போது அவுஸ்திரெலியாவில் வாழும் அவர் 'விளம்பரக்கலை' என்று நூல் ஒன்று எழுதி வெளியிட்டிருப்பதாக அறிகிறேன். அண்மையில் அங்கு பவள விழாக்கொண்டாடிய அவரை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

1971ம் ஆண்டில் நடந்த மிகமுக்கியமான நிகழ்வு. தேசிய சேவைக்கான நாடக நடிகர் தேர்வு நடந்ததும், நான் அதில் தெரிவு செய்யப்பட்டதும் தான்.

வர்த்தக சேவை நாடகங்களில் தயாரிப்பாளர் நினைத்தால் யாரையும் நடிக்க வைக்கலாம். ஆனால் தேசிய சேவை நாடகங்களில் தேர்வில் (Audition) தெரிவு செய்யப்பட்டவர்களே குரல் கொடுக்கலாம். குரல் கொடுக்கலாம் என்று நான் சொல்வதற்கு காரணமிருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் யாரோ இருமுவதாக இருந்தாலும் அதையும் யாரையும் கொண்டு இருமச்செய்ய முடியாது. ஒரு Auditioned நடிகர் வந்து இருமினால் சரி. இல்லாவிட்டால் இருமலை கைவிடவேண்டியது தான்.

இன்னும் ஒரு எழுதாத விதியும் இருந்தது. வர்த்தகசேவை நாடகங்களில் தொடர்ந்து நடிப்பவர்கள் அவர்கள் தேர்வு பெற்ற நடிகர்களாக இருந்தாலும், தேசிய சேவை நாடகங்களில் சந்தர்ப்பம் பெறுவது குறைவு. இந்த நிலையில் நடிகர் தேர்வு எவ்வளவு கடினமாக இருக்குமென்று ஊகித்துக் கொள்ளுங்கள்.

நடிகர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரி பல நாட்களாக வானொலியில அறிவிப்பார்கள். இலங்கை பூராவிலிருந்தும் விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் வரும். தேர்வு பல சுற்றுக்களாக, பல நாட்களாக நடைபெறும். ஆயிரங்கள் சில நூறுகளாக குறைக்கப்பட்டு, பின்னர் ஒரு நூறு, ஐம்பது, முப்பது என்று குறையும்.

எனவே ஒருவரே பல தடவைகள் தேர்வுக்கு போகவேண்டிவரும். தேர்வுக்கு போனவுடன் கையில் ஒரு கத்தைப்பேப்பரைத் தருவார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு நாடகத்தின் பகுதியோ அல்லது ஒரு உரைச்சித்திரத்தின் பகுதியோ இருக்கும். நாடகங்களும் ஒவ்வொரு பேச்சு வழக்கில், ஒவ்வொரு வகையானதாக இருக்கும். யாழ்ப்பாண பிராந்திய பேச்சு வழக்கு, மட்டக்களப்பு பிராந்திய வழக்கு, கவிதை நடை, செந்தமிழ் நடை என்று பலவகையாக இருக்கும்.

எங்கள் முறை வர ஓலிப்பதிவுக்கூடத்தின் ஒலிவாங்கிக்கு முன்னே கொண்டு சென்று நிறுத்தப்படுவோம். அடுத்த பக்கத்தில் இருக்கும் தேர்வாளர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாதவகையில், எங்களை அவர்கள் காண முடியாத வகையில் இடையிலுள்ள கண்ணடித்தடுப்பு மறைக்கப்பட்டிருக்கும். எங்கள் நடிப்புத்திறனைக் கேட்டு தாங்கமுடியாமல் அவர்கள் தங்கள் முகங்களை சுருக்கி, தலையை பிடித்துக்கொண்டு, சுவர்களில் மோதிக்கொள்ளப் போவதை நாங்கள் பார்க்காமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

'இலக்கத்தைச் சொல்லி விட்டு எட்டாம் பக்கத்தை வாசியும்' என்று அசரீரியாகக் குரல் கேட்கும். எச்சிலை விழுங்கி, வியர்க்கும் கைகளால் நடுங்கும் பேப்பர் கத்தையை விரித்து, கண்களால் மேய்ந்து, 'அடே மானிடப்பதரே.. இந்திரன் சபையில் வந்து இப்படிக் கூறும் உனக்கு ' என்று சொல்லத்தொடங்க, இடைமறித்து 'ஆறாம் பக்கத்தை வாசியும்' என்று அசரீரி சொல்லும். இப்படியே மாறி, மாறி அழுதும், சிரித்தும் நடித்துக்காட்டி, ''போய் வாரும்.. அறிவிக்கிறோம்' என்று ஒரு குரல் கேட்க – ' அப்பாடா..' என்று வெளியில் வர, இன்னுமொருவர் அந்த பேப்பர் கத்தையை வாங்கிக் கொண்டு உள்ளே போவதற்கு தயாராக நிற்பார்..

அவரைப்பார்க்க எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது.. ஒரு மகாராஜாவுக்கு பிடிக்காத பழம் யாராவது கொண்டு வந்தால், மகாராஜா அந்தப் பழத்தையே கொண்டுவந்தவரின் வாயில் திணித்து அனுப்பி விடுவாராம். அன்னாசிப்பழம் கொண்டு போனவருக்கு இந்தக்கதி நேர்ந்து அவர் நோவுடன் வெளியில் வரும்போது மகாராஜாவுக்கு கொடுப்பதற்கு ஒருவர் பலாப்பழத்துடன் நின்றாராம். அன்னாசிப்பழக்காரர் தன் நோவை மறந்து சிரிசிரியென்று சிரித்தாராம். அதை நினைத்து நான் சிரிக்கவும் புதியவர் மிரளமிரளப் பார்த்துக்கொண்டு உள்ளே சென்றார்.

சிலவாரங்களின் பின்னர் நான் வேலையில் இருந்தபோது 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்று பெயர் பொறித்த கடித உறையுடன் ஒரு கடிதம் வந்தது. தேர்வு பெற்றவர்களுக்குத்தான் கடிதம் வரும் என்று அறிந்திருந்ததினால் உள்ளே என்ன இருக்கும் என்று யூகித்தறிந்தேன். கொள்ளைச் சந்தோசம்.

எனது தலைமை எழுதுவினைஞராக இருந்தவர், என்மேல் மிகுந்த அன்பு கொண்ட ஒருவர். டட்லி மெண்டிஸ் என்ற அவர் கடிதத்தைத் தரும்போதே என்னை வாழ்த்தித் தரும்படி நான் கேட்டுக்கொண்டேன். அவர் அப்படியே தர நான் இரண்டு கையாலும் பெற்றுக்கொண்டேன். என்கூட வேலை பார்த்தவர்கள் ஆச்சர்யத்தடன் பார்த்தார்கள். பின்னர் எழுந்துவந்து வாழ்த்திச் சென்றார்கள். நான் வேலைபெற்று முதன்முதலில் நியமனப்பத்திரம் பெற்றபோது கூட இவ்வளவு சந்தோசம் அடையவில்லை.

Wednesday, March 7, 2007

வானொலிக்கால நினைவுகள் - 4

என்னைப் போன்றவர்களுக்கு எல்லாமே முதல் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் நிலை. வானொலி அறிவிப்பாளர் தேர்வில் இறுதிச் சுற்று வரை சென்றதாக ஞாபகம். ஆனால் முன்னாள் சிறுவர்மலர் நடிகர்கள் பலரும் தெரிவாகினார்கள். அவர்களுள் விமல் சொக்கநாதன், கோகிலவர்த்தனி சுப்பிரமணியம் (சிவராஜா) நடராஜசிவம், பி. எச். அப்துல் ஹமீட், ஜோர்ச் சந்திரசேகரன் போன்றவர்கள் அடங்குவர்.

தோற்றாலும் தகுதியுடையவர்களிடம் தோற்கவேண்டும் என்று சொல்வார்கள். எனவே பிற்காலத்தில் சிறந்த அறிவிப்பாளர்களாக பிரகாசித்த இவர்களுடன் போட்டியிட்டு தெரிவ செய்யப்படாமல் போனதில் எனக்கு வெட்கமொன்றும் இருக்கவில்லை.

1971ம் ஆண்டு. எனது கலை வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. என்னைப்பொறுத்தவரையில் பல 'முதல்'களுக்கு சொந்தமான ஆண்டு. இதுவரை மற்றவர்களின் நாடகங்களில் நடித்து வந்த நான் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே முதன்முதலாக தயாரிப்பாளனாக ':சதுரங்கம்' மேடைநாடகத்தின் மூலம் மாறினேன்.

எஸ். எஸ். கணேசபிள்ளை, மறைமுதல்வன், கே. கந்தசாமி, சந்திரப்பிரபா மாதவன், ரோகினி போன்றவர்கள் என்னோடு நடித்தார்கள். கதிர்காமத்தம்பிணின் காட்சியமைப்பு, குறிப்பாக கிராமப்புற வீட்டின் வாசல் கடப்பு (கடவை என்றும் சொல்வார்கள்) நீண்டநாட்களாக பேசப்பட்ட தொன்றாயிற்று. நானே விளம்பரம் சேகரித்து, நாடக மலர் அடித்து (பறாளை பிரேமகாந்தன் என்பவரின் ரோஜாப்பூ சஞ்சிகை 'சதுரங்கம்' சிறப்பு மலர் வெளியிட்டது),

நானே ரிக்கற் விற்று, நானே கதாநாயகனாக நடித்து - இப்படி பல நானேக்களுக்குப் பிறகும். ஓரெயொரு ஆறுதல். மறைமுதல்வன் எழுதிய இந்த நாடகத்திற்கு நல்லபெயர் கிடைத்தது. பத்து வருடங்களுக்குள் வந்த சிறந்த பத்து நாடகங்களுக்குள் ஒன்றாக கே. எஸ். சிவகுமாரன் போன்ற விமர்சகர்கள் இந்த நாடகத்தை குறிப்;பிட்டார்கள்.

அடுத்த 'முதல்' – வானொலியில் தரமான விமர்சன சஞ்சிகை நிகழ்ச்சியாகக் கருதப்படும் 'கலைக்கோலம்' நிகழ்ச்சியில் முதன்முறையாக நான் கலந்த கொள்ளக் கிடைத்ததுதான். சிறந்த ஒலிபரப்பாளர்களில் (அறிவிப்பாளர்களோடு தயவசெய்து குழப்பிக்கொள்ளாதீர்கள் - Broadcasters) ஒருவராக நான் கருதும் காவலூர் ராசதுரை அப்போது 'கலைக்கோலம்' நிகழ்ச்சியை தயாரித்துக்கொண்டிருந்தார்.

பின்னர் இதே நிகழ்ச்சியை கலாநிதிகளான சிவத்தம்பி, கைலாசபதி, கவிஞர்கள் மகாகவி, சில்லையூர் செல்வராஜன் போன்ற வரிசையில் வந்து பட்டதாரி அறிவிப்பாளர்களான சற்சொரூபவதி நாதன், கமலினி செல்வராஜன் என்பவர்களைத் தொடர்ந்து 'விண் கூவும் பட்டத்தை'த் தவிர வேறு ஒரு பட்டமும் காணாத அடியேனும் கொஞ்சக்காலம் 'கலைக்கோலத்தை' தயாரித்து வழங்கியிருக்கிறேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கு வருகின்றேன். காவலூர் ராசதுரை அவர்கள் புதியவர்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதற்கு தயங்காதவர். மலிபன் கவிக்குரல் என்ற வர்த்தக நிகழ்ச்சி மூலம் 'ஈழத்து மெல்லிசைப்பாடல்கள்' உருவாகுவதற்கும் அதனால் எத்தனையோ கவிஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் புகழ்பெறவும் காரணமாய் இருந்தவர். புதியவர்கள் 'கலைக்கோலம்' மாதிரி நிகழ்ச்சிக்கு வந்து விட்டால் ஏதோ 'தீட்டு' பட்டுவிடும் என்று நினைப்பவரல்ல.

எங்களையெல்லாம் எடுத்த எடுப்பில் ஏதோ 'தொல்காப்பிய உரைக்கு' விமர்சனம், விளக்கம் வைக்கும் வேலையில் காவலூரார் ஈடுபடுத்தவில்லை. எங்களுக்கு தெரிந்ததை சொல்லும் வகையிலே ஒரு நாடக சம்பந்தமான உரையாடலுக்கே என்னை முதலில் அழைத்தார். தொடர்ந்த நிகழ்ச்சிகளிலே கலாவல்லுனர்கள், ஆசான்கள் எழுதிய கட்டுரைகளை வாசிக்க – ஆமாம்.. வாசிக்க வைத்தார்.

காலப்போக்கில் ஒரு நாடக விமர்சனம், ஒரு திரைப்பட விமர்சனம், ஒரு நாட்டிய விமர்சனம் என்று செய்யும்படி என்னைப் பணித்தார். நான் தயக்கம் காட்டியபோதும் அவர் ' ஒரு சராசரி பார்வையாளனாக உன் மனதில் பட்டதைச்சொல்.. போதும். ' என்று உற்சாகம் தந்து அனுப்பினார்.

சிங்கள நாடகாசிரியரான தயானந்த குணவர்த்தனாவின் 'நரி பானா' என்ற சிங்கள நாடகத்தை தழுவி எழுதப்பட்ட அந்த நாடகத்தின் பெயர் 'நரி மாப்பிள்ளை'. அது ஒரு குறியீட்டு நாடகம். தற்போது கனடாவில் வாழும் சின்னையா சிவனேசன் முதலானோர் நடித்த ஞாபகம். நான் புரிந்து கொண்டதைவிட, உணர்ந்து கொண்டதே அதிகம். என் விமர்சனத்தை முன்வைத்த பொழுது, சமபந்தப்பட்டவர்கள் யாருமே ஆட்சேபனைக்குரல் எழுப்பியதாக ஞாபகமில்லை.

அடுத்தது. 'வீட்டுக்கு வீடு' என்ற திரைப்பட விமர்சனம். ஜெய்சங்கர், லட்சுமி நடித்த ஒரு நகைச்சுவைப்படம். தியேட்டரின் இருளுக்குள்ளே யாரோ ஒருவன் (நான் தான்) கையில் ஒரு பேப்பர் துண்டை வைத்துக் கொண்டு அடிக்கடி குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்தவர்கள், இவன் யாரோ இந்தப்படத்தை பார்த்து கொப்பி அடித்து வேறு படம் செய்யப்போகிறானோ என்று நினைத்திருப்பார்கள்.

'விமர்சகனின் வேலை விளக்கம் அளிப்பதுதான். இப்படிச்செய்யுங்கள் என்று சிபார்சு செய்வதல்ல' என்று இயூஜின் அயனஸ்கோ சொன்னது மாதிரி நான் நடந்து கொண்டேன். நான் ரசித்தவற்றை தொட்டுக்காட்டியதுதான். நல்ல காலமாக 'இருப்பியல் வாதம்' 'பூர்சுவா' , 'சர்றியலிசம்' போன்ற சொற்களை பாவிக்கும் தேவை எனக்கு இருக்கவில்லை. நேயர்கள் தப்பினார்கள்.

சொற்கள் என்றவுடன் அண்மையில் காவலூராருடன் பேசக்கிடைத்தபோது பரிமாறிக்கொண்ட தகவல் ஞாபகத்திற்கு வருகின்றது. பத்மினியோடு எனக்குள்ள பிரச்சினைதான். நடிகை பத்மினியோடு அல்ல. அவர் பெயரோடு தான் தகராறே. பத்மினி என்பதில் வரும் 'ப'வை, Bha என்று தான் உச்சரிப்பேன். காவலூரரர் உச்சரிப்பு வகுப்பே நடத்திப் பார்த்தார். நான் டீhய விலே தான் நிற்பேன். கடைசியாக அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கை நான் நடித்த நாடகத்தில் பத்மினி பாத்திரம் வராமல் பார்த்துக்கொண்டார். பத்மினி நடித்த படங்களுக்கு விமர்சனம் செய்யவே விடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !

நாடகம், சினிமா என்று இறங்கியாகி விட்டது. இனி இசையில் கை வைப்பது தான அடுத்த வேலை. சாஸ்திரிய சங்கீதத்தில் கைவைத்து சங்கீதக்காரர்களிடம் குட்டு வாங்க நான் தயாராக இருக்கவில்லையாதலால், அப்போதுதான் காவலூரரின முயற்சியினால் முளை விட்டுக் கொண்டிருந்த 'மெல்லிசைப் பாடல்கள்' பற்றி, கலைக்கோலத்தில் கருத்துரை வழங்க நினைத்தேன். பாடகர்கள், பாடல் எழுதுபவர்கள், இசையமைப்பாளர்கள் என்று மெல்லிசையோடு சம்பந்தப்பட்டவர்களை தேடித்தேடிச் சந்தித்தேன்.

விபரங்கள், சிரமங்கள், முயற்சிகள் என்று என் குறிப்புப்புத்தகத்தை நிரப்பிக் கொண்டேன். நீண்டதொரு கட்டுரையாக விரிந்தது. சிறிய மழித்தலுக்குப் பிறகு கலைக்கோலத்தில், 'மெல்லிசைப்பாடல்கள்' என்ற கட்டுரை இடம்பெற்றதும், அதன் முழு வடிவமுமே பின்னர் 'ஞாயிறு சிந்தாமணியில்' வெளியிடப்பட்டதும் என் முயற்சிக்கு பலன் அளித்தது. வானொலியில் மெல்லிசைப்பாடல்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த எம். எஸ். செல்வராஜா என்னைத் தேடி வந்து, அந்த கட்டுரையைப் பாராட்டிச் சென்றது ஞாபகமிருக்கிறது.

இனியென்ன நடனந்தான். இலங்கை சங்கீத நாட்டிய சங்க விழாவில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் செல்வி விஜயாம்பிகை இராமசாமி (இந்திரகுமார்) யின் நடன நிகழ்ச்சி. முதல் ஒரு வாரமாக கொழும்பு பொது நூல் நிலையத்தில் பரதநாட்டியம், குச்சுப்புடி சம்பந்;தமான அகப்பட்ட நூல்களையெல்லாம் வாசித்தேன். நிறைய தகவல்களை சேகரித்துக் கொண்டு நிகழ்ச்சி பார்க்கச் சென்றேன்.

நிருத்தம், நிருத்தியம், முத்திரைகள் என்ற வார்த்தைப்பிரயோகங்களுக்கு நிஜமாகவே அர்த்தம் தெரிந்து கொண்டது பலனளித்தது. 'பாவம்', 'ராகம்', 'தாளம்'என்ற மூன்று சொற்களின் முதலெழுத்துக்களுடன், இவற்றின் இறுதி எழுத்தான 'ம்' இணைந்தே 'பரதம்' என்ற சொல் உருவாகியிருக்கலாம் என்று விமர்சனத்தை தொடங்கினேன்.

இசைக்கலைஞர்களைப்பற்றி பத்திரிகைகளில் எழுதிவந்த நவாலியூர் சச்சிதானந்தன் இந்த ஆரம்ப வாக்கியத்தை, என்னைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் குறிப்பிட்டு சிலாகித்துக் கொள்வார்.

இன்னமொரு விஷயம் நிகழ்ந்தது. அந்நாட்களில் நாடகப்பயிற்சிக்காக சரஸ்வதி மண்டபத்திற்கு அடிக்கடி செல்வேன். நடனமாடிய விஜயாம்பிகையின் தந்தையார்; என்னைத்தேடி, அங்கு வந்து சென்றதாகச் சொல்லி, விமர்சனத்தில் ஏதாவது இசகு பிசகாகச் சொல்விட்டேனோ என்றும் என் நண்பர்கள் கேட்டு வைத்தார்கள்.

அவர் நேரில் என்னைச் சந்தித்தபோழுது எனக்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அவர் கேட்ட முதல் கேள்வி –'நீரா.. விமர்சனம் செய்தது..?' அவ்வளவுதான். ஏன் முகபாவனை அவருக்கு காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். 'இவ்வளவு இளவயதுக்காரரான நீர் தான் அந்த விமர்சனத்தை செய்திருப்பீர்; என்று நினைக்கவேயில்லை.' என்று வாழ்த்திச்சென்றார். (தொடரும்)

Tuesday, March 6, 2007

வானொலிக்கால நினைவுகள் - 3

இந்தக்காலகட்டத்தில் நான் நிறையவே மேடைநாடகங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டேன். மறைமுதல்வனின் 'முசுப்பாத்திதான்' என்ற நாடகம்தான் நான் கொழும்பில் நடித்த முதலாவது மேடை நாடகம். 1968ல் பெப்ரவரி 13ந்திகதி. (திகதியைக் கவனித்துக்கொள்ளுங்கள்)

நடிகர் சிவாஜி கணேசன் பெண்வேசமிட்டு புகழடைந்ததை கேள்விப்பட்டோ என்னவோ தயாரிப்பாளர் ஒரு சிவாஜியை எனது கதாநாயகியாக பெண் வேடத்தில் நடிக்கவைத்தார். தற்போது லண்டனில் டாக்டராக இருக்கும் அந்த சிவாஜி, ஒப்பனையில் மிக அழகான பெண்ணாகவே காட்சி அளிக்கப்போக கதாநாயகனான நான் நிஜமாகவே ரொம்ப வெட்கப்பட்டேன். அப்பொது சிந்தாமணி பத்திரிகையில் நாடகவிமர்சனம் எழுதிய ஜெயசீலன் என்பவர் 'கதாநாயகன் வெட்கப்பட்ட அளவிற்கு நடிப்பில்; சோபிக்கவில்லை' என்று எழுதினார். (நல்ல காலம் - வெட்கப்படும் அளவிற்கு நடித்தார் என்று எழுதவில்லை)

இருந்தாலும் அக்கால இலங்கைத் தமிழ்நாடகத்துறையில், தமிழ்சினிமாவைப் போலவே இளம் கதாநாயகர்களுக்கு பஞ்சம் இருந்தது. இல்லாவிட்டால் நடுத்தரவயதைக் கடந்துவிட்ட பல நடிகர்கள் தமிழ்சினிமாவில் அரைக்காற்சட்டையுடன், கையில் சுருட்டிய கொப்பிகளுடன் சதாகாலமும் கல்லூரி மாணவர்களாகவே தோன்றுவதை பார்க்கும் பாக்கியத்தை பெற்றிருப்போமா ?

எனவே இந்தப் பற்றாக்குறையினால் பல மன்றக்காரர்கள் என்னை நடிக்க வருந்தி அழைத்தார்கள்;. (அழைத்ததின் பின்னர் ஏன் அழைத்தோம் என்று அவர்கள் வருந்தியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்) மாத்தளை கார்த்திகேசு, எஸ். எஸ். கணேசபிள்ளை, எஸ். ராம்தாஸ், கே. கே. மதிவதனன் ஆகியோரின் பல நாடகங்களில் நான் அனேகமாக கதாநாயகனாக அல்லது முக்கிய பாத்திரத்தில்; நடித்தேன். 69 – 70க்கு இடைப்பட்ட காலத்தில் 17 நாடகங்கள். கொழும்பு. யாழ்ப்பாணம். தெல்லிப்பளை, பளை மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேடையேறிய இந்த நாடகங்கள் எல்லாம்; அனேகமாக சிரிப்பு நாடகங்களே.

இக்காலப்பகுதியில் நான் வானொலிக்கென ஏதாவது எழுதவேண்டுமென்று நினைத்தேன். நகைச்சுவை மேடைநாடகங்களில் எழுந்தமானமாக, அதாவது சமயோசிதமாக பேசி நடித்த அனுபவத்தினால் நகைச்சுவையாக எழுதுவது எனக்கு இலகுவானதாகப்பட்டது.

இக்காலத்தில் கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரதப் பயணமே ஒரு சுவையாண அனுபவமாக இருக்கும். தினமும் ஒரு மணிபோல புறப்படும் யாழ்தேவியும் இரவு போகும் தபால் புகையிரதமும்; நிரம்பி வழிந்து கொண்டு போகும் - வரும். அதில் இருக்கை பிடிக்கிறது, அதுவும் மூலை இருக்கை (கோணர் சீற); பிடிக்கிறது தன்னிகரில்லா சாதனைமாதிரி கருதப்படும். ஆசனங்களுக்கு கீழே பேப்பரை விரித்து படுத்துக்கொண்டு போய் கொடிகாமம் இறங்கவேண்டியவர் சுன்னாகத்தில் இறங்கி பஸ் எடுத்து திரும்பி ஊர் வந்து சேரும் புதினங்களும் நடக்கும்.. இப்படியான அனுபவங்களுடன் அடிக்கடி பயணம் செய்யும் ஒரு கற்பனைப்பாத்திரத்தை உருவாக்கி, அவருக்கு 'சீசன் ரிக்கற் சீனித்தம்பி' என்று பெயரும் வைத்து அவரைப் பேட்டி காண்பதாக ஒரு குட்டி நாடகப்பிரதி எழுதினேன்.

என்னோடு அப்பொது வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரான கலைஞர் ரி. ராஜேஸ்வரன் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தேன். சிறந்ததொரு மேடை நடிகர். சரித்திர, இதிகாச பாத்திரங்களில் அருமையாக நடிப்பார். அப்போதுதான் அவர் கதாநாயகனாக நடித்த 'டாக்சி டிரைவர்' என்ற இலங்கைத்தமிழ்த் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அக்காலத்தில் வானொலி நாடக தயாரிப்பாளராக இருந்தவர் கண்டிப்புக்கு பேர்போன சானா அவர்கள். அவரது நாடகத்தயாரிப்பு முறைபற்றி பின்னர் குறிப்பிடுகிறேன். அவரிடம் பிரதி ஒன்றுக்கு அங்கீகாரம் பெறுவதே சிரமமான காரியம். அதற்குமுதல் அவரிடம் என்னனைப் போன்ற கற்றுக்குட்டியின் படைப்பு போய்ச் சேரவேண்டுமே. சானாவின் 'சாணக்கியன்' போன்ற மேடைநாடகங்களிலும், வானொலி நாடகங்களிலும் நடிப்பவராதலால் ராஜேஸ்வரன் மூலம் இந்தப்பிரதியை சானாவுக்கு அனுப்புவது எனக்கு சரியானதாகப்பட்டது.

நானும் அவரும் வேலையிடத்தில் அருகருகில் மேசைகளில் இருந்தோம்.. அந்தப்பிரதியை திரும்ப திரும்ப வெட்டித்திருத்தி எழுதிக்கொண்டிருந்தேன். எதையோ எழுதுவதும், எனக்குள் சிரித்துக்கொள்வதையும் பார்த்த அவர் 'என்ன எழுதுகிறீர்' என்று கேட்கவும், இதற்காகவே காத்திருந்தவன் போல பிரதியை அவரிடம் கொடுத்தேன். அவருக்கு நன்றாகப் பிடித்து விட்டது. அதே வேகத்தில் சானாவிடம் கொடுத்து பலத்த சிபார்சும் செய்திருக்கவேண்டும்.

சானா அப்போது 'மத்தாப்பு' என்ற கதம்ப நிகழ்ச்சியைத் தயாரித்துக்கொண்டிருந்தார். ஆறாம் இலக்க கலையகத்தில் ஏறக்குறைய 75, 80 பார்வையாளர்களுக்கு முன்னிலையில் ஒவ்வொரு மாதத்திலும் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஒலிப்பதிவு நடைபெறும். தொலைக்காட்சி வராத காலம் அது. புகழ்பெற்ற வானொலிக்கலைஞர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் இது என்பதால் நேயர்கள் இந்நிகழ்ச்சிக்கான அனுமதிப்பத்திரத்தை வேண்டிப்பெற்று தவறாமல் வருவார்கள். அந்த நேரத்தில் வானொலி நிலையத்தையும் சுற்றிப்பார்த்துக்கொள்ள அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பண்டா ஆறுமுகம், றொசாயிரொ பீரிஸ், ஆனந்தி சூர்யப்பிரகாஷ; (பின்னர் லண்டன் பிபிசியில் குரல்கொடுத்த அவரேதான்), ராசேஸ்வரி சண்முகம், ராஜம் ராஜன், எஸ். எஸ். கணேசபிள்ளை, ரி. ராஜேஸ்வரன், கே. மார்க்கண்டன், என். பி. தர்மலிங்கம், ரி.வி. பிச்சையப்பா, தாசன் பெர்னாண்டோ எம். விக்டர் முதலானவர்கள் மேடையில் தோன்றி குட்டிநாடகங்களில் நடித்து பார்வையாளர்களை சிரிக்கவைப்பார்கள். பார்வையாளர்களின் சிரிப்பும், கரகோஷமும் நிகழ்ச்சியுடன் சேர்ந்து ஒலிப்பதிவாகும். தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் பத்து மணிக்கு 'மத்தாப்பு' ஒலிபரப்பாகும்: போது நாடு பூராவும் மக்கள் காத்திருந்து கேட்பார்கள்.

அந்த நிகழ்ச்சியில் எனது பிரதி சேர்க்கப்பட இருப்பதாக கடிதம் வந்தது. கூரையில் எட்டித் தட்டும் சந்தோசம் எனக்கு. 1969 ஆகஸ்ற் 27ந்திகதி. என். பி தர்மலிங்கம் என்ற அனுபவம் வாய்ந்த நடிகர் எனது பிரதியில் நன்றாகவே நடித்தார். பேட்டி கண்டவர் யார் என்று நினைக்கிறீர்கள் ? சானாவேதான்.
அதற்குப் பிறகு என் காட்டில் மழைதான். தொடர்ந்து 'மத்தாப்பு' நிகழ்ச்சிகளுக்கு குட்டிநாடகங்களாக எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு ஒலிப்பதிவுக்கு எட்டு குட்டி நாடகங்கள் சேர்த்துக்கொள்வார்கள். சானா என்னுடைய முதல் நாடகப்பிரதிக்குப் பிறகு என்னுடைய பிரதிகளில்; மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

ஒரு முறை ஒலிப்பதிவுக்கு முதல்நாள் என்னை நாவலவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்த சானா, அடுத்த நாள் ஒலிப்பதிவுக்கு கிடைத்த பிரதிகள் எதிர்;பார்த்த அளவிற்கு நன்றாக இல்லையென்று, என்னால் உடனடியாக எத்தனை பிரதிகள் எழுதமுடியுமென்றாலும் எழுதித்தரும்படி கேட்டார். நான் இருந்த பொறளை வீட்டின் மொட்டை மாடியில் ( முற்றுப்பெறாமல் இருந்த மேல்பாகத்தில் );, ஒரெயொரு பல்பின் வெளிச்சத்தில் கதிரையைப் போட்டு, ஐந்தாவது நாடகத்தை எழுதிமுடிக்க, பொழுத விடிய ஆயத்தமாகியிருந்தது. குளித்து விட்டு அப்படியே புறப்பட்டு சானாவிடம் ஐந்து பிரதிகளையும் இலங்கை வானொலியில் வைத்து கொடுத்துவிட்டு நித்திரைக் கலக்கத்தடன் வேலைக்குப் போய்ச்சேர்ந்தேன். அவை எல்லாமே ஒலிப்பதிவின்போது நன்றாக வந்ததில் சானாவுக்கும் எனக்கும் சந்தோசந்தான்.

இந்தநாட்களில் வானொலிக்கு தமிழ் பகுதிநேர அறிவிப்பாளர்களை தேர்வு செய்யப்போவதாக அறிவித்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். இலங்கை வானொலியில் அப்போது சிறுவர்மலர் காலத்திலிருந்தே நடிக்கத்தொடங்கிய பலர் இருந்தார்கள். வானொலி நிலையத்துடனான நீண்டநாள் தொடர்பு அவர்களுக்கு அனுகூலமாகவே இருந்தது. வானொலி நிலைய நிர்வாகிகள், மூத்த அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும்; அவர்களைத் தெரிந்திருந்தது. மாமா, மாமி என்று சர்வசாதாரணமாக அவர்களை அழைப்பார்கள். எங்களுக்கு அது சற்று ஆச்சர்யமாகக்கூட இருக்கும். நடிகர்களாகவோ, அறிவிப்பாளர்களாகவோ வருவதில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைத்தது. இதில் தவறு ஒன்றுமில்லை. பின்னாளில் அரசியல் பூச்சுக்களுடன் யார் யாரோவெல்லாமோ அறிவிப்பாளர்களாக வந்தார்கள். அதைவிட இது எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்.. (தொடரும்)

Monday, March 5, 2007

வானொலிக்கால நினைவுகள் - 2


நான் வேலையில் சேர்ந்தபோதே வானொலியுடன் தொடர்பு உள்ளவர்கள் எனது திணக்களத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா?
அதில் ஒருவர் "செய்திகள் வாசிப்பவர் எஸ். நடராஜன்" என்று கம்பீரமாக, அட்சரசுத்ததுடன் சொல்வதினால் பலருக்கு அறிமுகமானவர். உலகத்தில் நடக்கின்ற செய்திகளையெல்லாம் தினமும் சொல்லும் அவர் வேலை செய்யும் இடத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். அனாவசியமாக வாய் திறக்கவே மாட்டார்.

என்னுடைய வானொலித் தாகத்தை தெரிந்த நண்பன் ஒருவன் "அவர் வானொலியில் இளஞர்களுக்காக " குதூகலம்" என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார், சந்தர்ப்பம் கேட்டுப்பார்" என்று தூண்டி விட்டான். நானும் சந்தர்ப்பம் கேட்பதற்கான நல்ல சந்தர்ப்பத்தை பார்த்துக் காத்திருந்தேன். நாட்களும் கழிந்து போயின.

"இப்படியே போனால் வயோதிபர் பங்குபற்றும் "முதியோர் வேளை"யில் தான் பங்குபற்றப் போகிறாய்.. " என்று நண்பன் அறிவுறுத்தலும் தந்தாகி விட்டது. என் அம்மா என்னைப் பார்த்து அடிக்கடி சொல்வதும் ஞாபகத்திற்கு வந்தது. "நீ எல்லாத்துக்கும் 'ஆசனப்பகுதியிலை' வெள்ளம் படுமட்டும் பார்த்துக்கொண்டிருப்பாய்.."
(ஆசனப்பகுதி என்ற சொல்லுக்கான புழக்கத்திலுள்ள சொல் பண்பு கருதி தவிர்க்கப்பட்டுள்ளது)

கடைசி கடைசியாக மரணயோகம் இல்லாத ஒரு சுபமுகூர்த்தவேளையில் (அப்படியாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் எங்கள் நேயர்களின் அபிமானத்தைப் பெறும் பாக்கியம் எனக்கு கிட்டியிருக்குமா ?) நான் அவரை அணுகி என் விருப்பத்தை தெரிவித்தேன்.

அவர் நான் எதிர்பார்த்தது மாதிரி பீடிகை ஒன்றும் போடாமல் ( நடிக்க வரும்போது பற்கள் சுத்தமாக தீட்டப்பட்டிருக்க வேண்டும். தலை ஒழுங்காக சீவப்பட்டிருக்கவேண்டும். ஒலிப்பதிவின் போது இரண்டு தரத்துக்கு மேல் செருமக்கூடாது. இந்தமாதிரி பீடிகைகள் இல்லாமல் ) வெகு சாதாரணமாக "வருகிற ஞாயிற்றுக்கிழமை, "குதூகலம்" ஒலிப்பதிவுக்கு வாரும்" என்று சொல்லி விட்டார்.

பிறகென்ன.. பிறந்ததின் பயனை அன்றே பெற்றதுமாதிரி ஒரே குதூகலந்தான். இலங்கை முழுவதும், ஏன் அதற்குமப்பாலும் என் குரல் ஒலிக்கப் போகின்றதே என்ற சந்தோசந்தான். அரசியல் தலைவர்கள்/தலைவிகள் காலில் விழும் மூத்த/குட்டி அரசியல்வாதிகளைப் போல, "நடராஜனின்" காலில் விழுந்திருப்பேன். ஆனால் அவரது மேசையைச் சுற்றி அடுக்கப்பட்டிருந்த வருமானவரிக் கோப்புகளினால் ( Income Tax Files) அவரது கால்கள் எனக்குத் தெரியவில்லை. எனவே "தாங்ஸ்" என்ற சுத்தமான தமிழில் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.

அவர் ஒலிப்பதிவுக்கு வரச்சொன்ன நாள் 1967 ஆகஸ்ட் 13ந் திகதி. பதின்மூன்று தான் சற்று உதைக்கிறமாதிரி இருந்தது. ( மகா அலெக்ஸாந்தர் தான் கடவுள் என்பதாக தன் தலைந்கரில் இருந்த சிலைகளோடு 13வது சிலையாக தன்சிலையை நிறுவினானாம். ஆனால் அவன் உடனேயே இறந்துபோக, 13 அதிஷ்டமற்ற எண்ணாகக் கருதப்பட்டது என்கிறார்கள்). இருந்தாலும் இதையெல்லாம் பார்க்கமுடியுமா?

"குதுகலம்" தயாரிப்பாளர் குறிப்பிட்ட நேரத்துக்கு, "டாண்" என்று இலங்கை வானொலியின் வரவேற்புக்கூடத்தில் ஆஜரானேன். ( நான் நடிக்கப்புறப்பட்டதினாலோ என்னவோ அந்த ஆண்டே, 1967 செப்டெம்பர் 30ந்திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்று பெயர் மாற்றி வைத்துக் கொண்டார்கள். என் ராசி அப்படி.)

நான் இருந்த கூடத்தின் பெயரில் இருந்த "வரவேற்பு" , நேரில் இருப்பதாகத் தெரியவில்லை. நான் பார்த்துக் கொண்டே இருக்க, யார், யாரோவெல்லாம் உள்ளே போனார்கள். வெளியே வந்தார்கள். " இவர் அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ " என்று தெரிந்த "வானொலிப் பிரபலங்களை" நினத்துக் கொண்டேன். ஆனால் என் பக்கம் பார்த்தவர்களும் "யார் இந்த அற்பப் பதர்" என்பது போல பார்ப்பதாக எனக்குப்பட்டது. " இருங்கள்..இருங்கள்.. எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் தானே." என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டேன்.

நேரம் கடந்து போய், "என் வானொலிக்கனவுகள்.. அவ்வளவுதான்" என்று நினைத்தவேளையில், "நடராஜன்" தரிசனம் கொடுத்தார். " என்ன இங்கையா இருக்கிறீர்.. உமக்கு தந்த அனுமதி துண்டைக் காட்டி விட்டு உள்ளே வந்திருக்கலாமே " என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார். பின்தொடர்ந்தேன். வழி, வழியே ஒலிப்பதிவு அறைகள். சிலவற்றின் முன்னே ஒளிரும் "சிவப்பு" வெளிச்சங்கள். அது ஒலிப்பதிவு நடந்து கொண்டிருப்பதற்கான அடையாளம் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.

நேராக வந்து ஆறாம் இலக்க கலையகத்தின் முன்னால் நின்றோம். ( இதை இப்போது
" குமாரதுங்க முனிதாச கலையகம்" என்று பெயர் மாற்றி விட்டார்கள் என்று நினக்கிறேன். என் ராசிதான்.) உள்ளே போக அடுத்து அடுத்து இரண்டு கதவுகள். ஒன்றை வெளியே இழுத்து, மற்றதை உள்ளே மகா பிரயத்தனத்துடன் தள்ளி நுழையவேண்டும். வெளியிலிருந்து உள்ளே ஒலி கசிந்து விடாமலிருக்க இந்த ஏற்பாடு என்று அறிந்து கொண்டேன். வானொலித்துறையில் நுழைவது எவ்வளவு சிரமமானது என்பதை இது எனக்கு சூசகமாக உணர்த்தியது.

"அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்தில் வருகிறமாதிரி, "திறந்திடு சிசேம்" என்றவுடன் திறக்கின்ற கதவுகளாகவிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒருமாதிரி கதவைத் திறந்து உள்ளே போனால், ஆறு அங்குல உயரமான மனிதர்கள் வாழும் லில்லிபுட் நாட்டில் கரையொதுங்கிய கலிவரைப் போல இருந்தேன். "குதூகலம்" நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்திருந்தவர்கள் எல்லோருமே என்னைவிட சிறியவர்கள் என்று விளக்க அப்படிச் சொன்னேன்.

ஏறக்குறைய 17, 18 வயதுடைய அவர்கள் மத்தியில் 23 அகவை உடைய நான் போய் நின்றதும், கைகளில் வைத்திருந்த பிரதிகளில் இருந்து கண்களை எடுத்துக் கொண்டு என்னை அவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தயாரிப்பாளர் நடராஜன் எனக்கு ஒரு பிரதியை கொடுக்கச் சொல்லவும், அவர்களில் ஒருவர் எனக்கு ஒரு பிரதியைத் தந்தார். மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அது ஒரு குட்டி நாடகம். அதன் பெயர் "இப்படி நடந்தால்".

ஒருவாறு நடித்து ஒலிப்பதிவும் முடிந்துவிட்டது. வானொலி நிலையத்தின் ஒலிவாங்கியுடன் நான் அதற்கிடையில் ஒருமாதிரி சிநேகமாய் விட்டேன். அன்று ஆரம்பித்த நட்பு..ம்..எவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்தது.

அந்த மாதமே 29ந்திகதி என் நாடகம் ஒலிபரப்பாகும் என்று சொன்னார்கள். 15 நாட்கள் அவகாசத்திற்கிடையில் பல கடிதங்கள் - என் வீட்டுக்கு, பின்னர் மனைவியாக வந்த என் காதலிக்கு, ஊரில் இருக்கும் என் ந்ண்பர்களுக்கு என்று எழுதித் தள்ளினேன்.

ஒரே ஒருவரைத்தவிர (யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்) மற்றவர்கள் யாருமே பதில் கடிதம் என்ன, போஸ்ட் கார்ட் கூடப் போடவில்லை. இத்தனைக்கும் அப்போது முத்திரைசெலவு பதினைந்து சதந்தான்.

வந்த கடிதமும், " என்றும் என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் உங்களுக்கு" என்று ஆரம்பித்து, " எங்கள் வீட்டு ஆடு இரண்டு குட்டிகள் போட்டிருக்கிறது.. காற்றோடு மழை அடித்து எங்கள் வீட்டுக்கு அருகில் நின்ற கிழுவை மரக்கொப்பு முறிந்து விழுந்து வீட்டின் இரண்டு ஓடுகள் உடைந்து போச்சு.. என்ற மாதிரி தகவல்களுக்கிடையில், பிடிக்காத சங்கீத வித்வானைப் பற்றி விமர்சகர் சுப்புடு எழுதும் கறாரான வரியைப் போல, போகிற போக்கில் எழுதப்பட்டிருந்தது. ஒரு வரி. "உங்கள் நாடகம் கேட்டேன்"

நான் அப்போது தெஹிவளையில் ஒரு வீட்டின் முன் அறையில் இருந்தேன். வீட்டுச்சொந்தக்காரர் ஒரு டென்னிஸ் விளையாட்டுக்காரர். (நான் நினைப்பது சரியென்றால் அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன் சுரேஷ் தான், பிற்காலத்தில் இலங்கையின் சார்பாக சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டவர். இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவராக இருந்த சுரேஷ் சுப்பிரமணியம் அவர்தான்.) எனது நாடகத்தைப் பற்றி வீட்டுக்காரருக்கு சொல்லி வைக்கவும், அவர் ஒலிபரப்பான அன்று எனக்காக தங்கள் வானொலியின் ஒலியைக் கூட்டிவைத்து தானும் என்னோடு இருந்து கேட்டு, "நல்லாயிருக்கிறது" என்று சொல்லி வைத்தார். என் முதல் விமர்சகர் அவர்தான்.

அதற்கு பிறகு ஒரு வருடத்திற்கிடையில் - ஆள் மாறாட்டம், சேறும் சகதியும், உறவும் பிரிவும், பதினையாயிரம், காலம் கடந்த காதல், காதல் இன்றேல் சாதல், எனக்கு அவள் வேண்டாம் என்றாகி விட்டது. அதிகமாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

இவையெல்லாம் நான் "குதூகலத்தில்" நடித்த குட்டி நாடகங்கள்.














என்ன தான் குட்டிநாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், கனவு என்னவோ தேசிய சேவை, வர்த்தகசேவை நாடகங்களில் நடிப்பது பற்றியதாகவே இருந்தது. அப்போதுதானே வானொலி நடிகன் என்ற அந்தஸ்து கிடைக்கும். அதற்கான நேர்முகம் (Audition) வெகுவிரைவில் வரப்போகிறது என்று சொல்லிக்கொண்டார்கள்.


இதற்கான பயிற்சி மேலும் எடுக்கவேண்டும் என்று எனக்கு தெரிந்திருந்தது. கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டேன். தெளிவாக சொற்களை உச்சரிக்கும் பாங்கு கைவ்ர வேண்டுமென்றால் கவிதைகளை உரத்து வாய் விட்டுப்படிக்க வேண்டும். உரைச்சித்திரங்களை நிதானமாக பொருள் விளங்க வாசிக்க வேண்டும். கவிஞர் காசி ஆனந்தன் அப்போது "இளைஞர் மன்றம்" நிகழ்ச்சியை தயாரித்தார். அங்கே கவிதை, உரைச்சித்திரம் வாசிப்பதே என் மூச்சாகியது.






(இன்னும் இருக்கிறது)

Sunday, March 4, 2007

வானொலிக்கால நினைவுகள் -1

வானொலியோடு எனது தொடர்பு எப்போது ஆரம்பமானது ?

ஆதி, அந்தம இல்லா அருட்பெருஞ் சோதியே என்று பாடலாம் போலத்தோன்றுகிறது. அவ்வளவு நீண்ட காலம். எங்கள் ஊரில் வானொலி பாடிய முதலாவது வீடு எங்கள் வீடு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்.

(வேறு யாரும் உரிமை கோரவில்லை என்பதுதான் உண்மை)

ஹிஸ் மாஸ்டர்ஸ் வொயிஸ் வானொலி. அக்கால அமைதியான இரவுகளில், வெகுதூரம் வரை கேட்கும். மாலையானதும், அப்பா வானொலியை பக்குவமாக கொண்டு வந்து முன் மேசையில் வைத்து, கார் பட்டறியோடு இணைப்பை ஏற்படுத்தி, குமிழ்களை முறுக்க, 'கற,புற" சத்தங்களிடையே மதறாஸ் 1, மதறாஸ் 2 எல்லாம் கடந்து திருச்சி நிலையத்தில் வந்து நிற்கும்.

அதுவும் மார்கழி மாதத்தில், இசை விழா காலமென்றால் கர்நாடகஇசை வெள்ளம் பாய்ந்தோடி வரும்.
முற்றம் முழுவதும் அண்டை, அயலார் கூட்டம்.

அம்மா குசினிக்குள் போய், போய் வந்து எல்லோருக்கும் தேனீர் உபசாரம் நடக்கும். நல்ல நாள் பெரிய நாள் வந்து விட்டால் வடை, மோதகம், கொழுக்கட்டையும் தேனீரோடு கூடவே வரும்.

திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கானாம்ருதம், சீர்காழி கோவிந்தராஜனின் தித்திக்கும் தமிழ் கீதங்கள் அங்கு, இங்கெலாம் நிறைக்கும். பேச்சொலிகள் அடங்கி, தலைகள் ஆடும்.

"ஆகா இதெல்லோ வாசிப்பு..மனுசியின்ரை குரல் தேன் தான்"

"கோடி கொடுத்தாலும் பெறும்."
இப்படி இடையிடையே விமர்;சனக் குரல்கள் கேட்கும்.

'கதையை விட்டிட்டு பாட்டைக் கேளுங்கோவன்"

அப்பாவின் ஆணையில் அவ்வொலிகளும் அடங்கி விடும். இரவு எத்தனை மணி வரை கச்சேரி நடந்தது என்பது அநேகமாக எனக்கு தெரியாமல் போய் விடும்.

முற்றத்தில் அப்படியே உறங்கிப் போய் -

'மேலெல்லாம் மண்--நித்திரை வந்தால் போய் படாதையன்"

அம்மா பேசிக்கொண்டே எனது மேல், காலெல்லாம் அப்பியிருக்கும் மண்ணை துடைத்து விடுவது கனவு போல இருக்கும். இப்படியாக அனேகமான மாலைப்பொழுதுகள் என்னைப் பொறுத்தவரையில் சங்கீதப் பொழுதுகளாக போயின.

இலங்கை வானொலி மிக அரிதாக, அக்காலத்தில் எங்கள் வீட்டில் ஒலிக்கும்.

ஆடிவேல் திருவிழா கச்சேரிகளின் நேர்முக அஞ்சல், நல்லூர் தேர், தீர்த்த நேர்முக வர்ணனை

இலங்கையர்கோனின் விதானையார் வீடு நாடகம்;.

இவைதான் அந்த விதிவிலக்குப் பெறும் நிகழ்ச்சிகள்.

முதல் இரண்டினுக்கும் சங்கீத அபிமானமும், சமய அபிமானமும் காரணம் என்றால், மூன்றாவதற்கு ஊர் அபிமானம் காரணமாக அமைந்தது.

விதானையார் வீட்டில் விதானையாராக நடித்த கே.சிவத்தம்பியும், வேலைக்காரனாக நடித்த கே.மார்க்கண்டனும் எங்கள் ஊரான கரவெட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் அது.

இருவருமே நான் அப்போது படித்துக் கொண்டிருந்த விக்கினேஸ்வராக் கல்லூரியில் படித்தவர்கள் என்பது எனக்கு பெருமையாக இருந்தது.

அவர்கள் எனக்கு ஆதர்ஸ புருசர்கள் ஆகியது இதனால் தான்!

கார்த்திகேசு சிவத்தம்பி ஓரு பீ.ஏ பட்டதாரியாக கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலம் அது.

எனது சிறிய தந்தையாரின் பால்ய நண்பனாக இருந்த காரணத்தினால், ஊருக்கு வரும் போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதுண்டு. அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.

அவர் பேசுவதை உற்றுக் கேட்டு, 'சரியாக அந்த விதானையார் மாதிரியே பேசுகிறாரே" என்று வியந்து கொண்டிருப்பேன்.

நீண்ட காலத்துக்கு பிறகு, இதேமாதிரியான கேள்விகள் என்னிடமே கேட்கப் பட்ட போது

'என்னண்ணை சும்மா கதைக்கிற நேரமும் தணியாததாகம் சோமு மாதிரியே கதைக்கிறீங்கள்"

நான் நினைத்தது அப்போது ஞாபகத்திற்கு வரும்.

அந்த வானொலி நடிகர்தான் -

தற்போது உலகளாவிய அளவில் தமிழ் கலை பண்பாடு, நாடகம் போன்ற துறைகளில் பாண்டித்யம் பெற்றவராக, இலக்கிய சர்ச்சைகள் எழும் வேளைகளில் இறுதி அபிப்பிராயம் கூறும் தகுதி படைத்தவராக விளங்கும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்பது உங்களுக்கு இந்தளவில் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்தவரான கே.மார்க்கண்டனின் தந்தையார், தனது மகனின் நடிப்பை கேட்டு ரசிப்பதற்காகவே எங்கள் வீட்டிற்கு வருவார். தனது மகனை பாராட்டி யாராவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் அவர் இருப்பார்.

யாரும் வாயே திறக்கமாட்டார்கள். இருந்து பார்த்து விட்டு, 'என்னுடைய மகன் மாதிரி நடிக்க இங்கை யார் இருக்கினம்" தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்று விடுவார். அவரது ஆதங்கம் எனக்கு இப்போது புரிகிறது.

கே.மார்க்கண்டன் ஒரு அற்புதமான வானொலி நடிகர் என்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு.

இவ்வாறு இந்த இரு கலைஞர்களின் பாதிப்பு ஒரு பக்கமிருக்க, எனது அப்பாவின் இயற்கையான நகைச்சுவை உணர்வும், கலை ஆர்வமும் என்னை கலைப்பாதையில் செல்ல தூண்டிய காரணிகளாயின.

தென்னிந்தியப் பத்திரிகையான குங்குமம் ஆண்டு மலருக்காக என்னை பேட்டி கண்டு, எனது கலைவாழ்வின் தொடக்கத்தைப் பற்றி கேட்ட பொழுது இதையே பதிலாக சொன்னேன்.

கல்லூரி காலத்திலும், வெளியிலும் இரண்டொரு மேடை நாடகங்களில் நடித்து விட்டு, 1966ல் கொழும்பில் வேலை கிடைத்து, புகையிரதம் ஏறும்போதே வானொலிக் கனவுகளும் கூடவே என்னுடன் வந்தன.

கொழும்பி;ல் வேலை ஏற்ற பின்னர் நான் செய்த முதலாவது காரியம், எனது ஆதர்ஸ புருசர்கள் இருவரையும் தேடிப் புறப்பட்டதுதான். மார்க்கண்டனை சந்திக்க முடியவில்லை.

சிவத்தம்பியை வெள்ளவத்தையில் அவரது அறையில் சந்தித்து வானொலி நடிகனாக வர சிபார்சு ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டதாக ஞாபகம். அவர் சொன்ன பதில் அப்போது ஏமாற்றத்தை தந்தாலும் மிகச் சரியானதென பின்னர் உணர்ந்தேன்.

'எனது சிபார்சு உனக்கு சிலவேளைகளில் பாதகமாகவும் அமையலாம். நீயே நேரடியாக வானொலி நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி, உனது முயற்சியினால், திறமையினால் நல்ல நடிகன் என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் யாராலும் உனக்கு தடை போட முடியாது."

பல ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு சந்தர்ப்பத்தில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வெள்ளிவிழா என்று நினைக்கிறேன்- சிறப்பு நிகழ்ச்சிகள் பல ஒலிப்பதிவு செய்தார்கள்.

காலம்சென்ற பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய வடமராட்சிப் பேச்சு வழக்கில் அமைந்த 'உடையார் மிடுக்கு" என்ற நாடகம். என்னுடன் கூட நடித்தவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள் ?

பேராசிரியர் கா.சிவத்தம்பி(மிக நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இவர் நடித்த முதல் வானொலி நாடகம். இதற்கு பிறகு நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் ).

கே.மார்க்கண்டன், கூட நடித்த மற்றக் கலைஞர்.

போராசிரியர் பழையதை நினைவுபடுத்தி-

'பாலா உன்னுடைய திறமை உனக்கு மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது" என்று சொன்னார்.

இந்நேரத்தில் எனது கலைப்பாதையில் அவ்வப்போது பலர் காட்டிய அக்கறை எனது வளர்;ச்சிக்கு காரணமாக அமைந்ததை குறிப்பிடத்தான் வேண்டும்.

நான் வேலைக்குச் சேர்ந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலே இலங்கை வானொலியோடு தொடர்பு உடையவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்ற செய்தியே எனக்கு தித்திப்பாக இருந்தது.

இலங்கை வானொலியில் செய்திகள் வாசிப்பவராக இருந்த எஸ். நடராஜ ஜயர், கலைஞர் எஸ்.எஸ். கணேசபிள்ளை, . கலைஞர். ரி. ராஜேஸ்வரன் ஆகியோர் அப்போது இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

என் கலை வாழ்வின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக இருந்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.


(இன்னும் இருக்கிறது)

Friday, March 2, 2007

அது ஒரு வானொலிக் காலம்




இலங்கையிலிருந்துவெளிவரும் "இருக்கிறம்" சஞ்சிகையில் எனது வானொலிக்கால நினைவுகளை தொடராக எழுதியிருந்தேன். அவற்றில் முதலாவது கட்டுரையை PDF வகையில் நீங்கள் கீழே பார்வையிடலாம்.


1. வானொலிக்கால நினைவுகள் - 1