Tuesday, March 6, 2007

வானொலிக்கால நினைவுகள் - 3

இந்தக்காலகட்டத்தில் நான் நிறையவே மேடைநாடகங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டேன். மறைமுதல்வனின் 'முசுப்பாத்திதான்' என்ற நாடகம்தான் நான் கொழும்பில் நடித்த முதலாவது மேடை நாடகம். 1968ல் பெப்ரவரி 13ந்திகதி. (திகதியைக் கவனித்துக்கொள்ளுங்கள்)

நடிகர் சிவாஜி கணேசன் பெண்வேசமிட்டு புகழடைந்ததை கேள்விப்பட்டோ என்னவோ தயாரிப்பாளர் ஒரு சிவாஜியை எனது கதாநாயகியாக பெண் வேடத்தில் நடிக்கவைத்தார். தற்போது லண்டனில் டாக்டராக இருக்கும் அந்த சிவாஜி, ஒப்பனையில் மிக அழகான பெண்ணாகவே காட்சி அளிக்கப்போக கதாநாயகனான நான் நிஜமாகவே ரொம்ப வெட்கப்பட்டேன். அப்பொது சிந்தாமணி பத்திரிகையில் நாடகவிமர்சனம் எழுதிய ஜெயசீலன் என்பவர் 'கதாநாயகன் வெட்கப்பட்ட அளவிற்கு நடிப்பில்; சோபிக்கவில்லை' என்று எழுதினார். (நல்ல காலம் - வெட்கப்படும் அளவிற்கு நடித்தார் என்று எழுதவில்லை)

இருந்தாலும் அக்கால இலங்கைத் தமிழ்நாடகத்துறையில், தமிழ்சினிமாவைப் போலவே இளம் கதாநாயகர்களுக்கு பஞ்சம் இருந்தது. இல்லாவிட்டால் நடுத்தரவயதைக் கடந்துவிட்ட பல நடிகர்கள் தமிழ்சினிமாவில் அரைக்காற்சட்டையுடன், கையில் சுருட்டிய கொப்பிகளுடன் சதாகாலமும் கல்லூரி மாணவர்களாகவே தோன்றுவதை பார்க்கும் பாக்கியத்தை பெற்றிருப்போமா ?

எனவே இந்தப் பற்றாக்குறையினால் பல மன்றக்காரர்கள் என்னை நடிக்க வருந்தி அழைத்தார்கள்;. (அழைத்ததின் பின்னர் ஏன் அழைத்தோம் என்று அவர்கள் வருந்தியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்) மாத்தளை கார்த்திகேசு, எஸ். எஸ். கணேசபிள்ளை, எஸ். ராம்தாஸ், கே. கே. மதிவதனன் ஆகியோரின் பல நாடகங்களில் நான் அனேகமாக கதாநாயகனாக அல்லது முக்கிய பாத்திரத்தில்; நடித்தேன். 69 – 70க்கு இடைப்பட்ட காலத்தில் 17 நாடகங்கள். கொழும்பு. யாழ்ப்பாணம். தெல்லிப்பளை, பளை மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேடையேறிய இந்த நாடகங்கள் எல்லாம்; அனேகமாக சிரிப்பு நாடகங்களே.

இக்காலப்பகுதியில் நான் வானொலிக்கென ஏதாவது எழுதவேண்டுமென்று நினைத்தேன். நகைச்சுவை மேடைநாடகங்களில் எழுந்தமானமாக, அதாவது சமயோசிதமாக பேசி நடித்த அனுபவத்தினால் நகைச்சுவையாக எழுதுவது எனக்கு இலகுவானதாகப்பட்டது.

இக்காலத்தில் கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரதப் பயணமே ஒரு சுவையாண அனுபவமாக இருக்கும். தினமும் ஒரு மணிபோல புறப்படும் யாழ்தேவியும் இரவு போகும் தபால் புகையிரதமும்; நிரம்பி வழிந்து கொண்டு போகும் - வரும். அதில் இருக்கை பிடிக்கிறது, அதுவும் மூலை இருக்கை (கோணர் சீற); பிடிக்கிறது தன்னிகரில்லா சாதனைமாதிரி கருதப்படும். ஆசனங்களுக்கு கீழே பேப்பரை விரித்து படுத்துக்கொண்டு போய் கொடிகாமம் இறங்கவேண்டியவர் சுன்னாகத்தில் இறங்கி பஸ் எடுத்து திரும்பி ஊர் வந்து சேரும் புதினங்களும் நடக்கும்.. இப்படியான அனுபவங்களுடன் அடிக்கடி பயணம் செய்யும் ஒரு கற்பனைப்பாத்திரத்தை உருவாக்கி, அவருக்கு 'சீசன் ரிக்கற் சீனித்தம்பி' என்று பெயரும் வைத்து அவரைப் பேட்டி காண்பதாக ஒரு குட்டி நாடகப்பிரதி எழுதினேன்.

என்னோடு அப்பொது வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரான கலைஞர் ரி. ராஜேஸ்வரன் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தேன். சிறந்ததொரு மேடை நடிகர். சரித்திர, இதிகாச பாத்திரங்களில் அருமையாக நடிப்பார். அப்போதுதான் அவர் கதாநாயகனாக நடித்த 'டாக்சி டிரைவர்' என்ற இலங்கைத்தமிழ்த் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அக்காலத்தில் வானொலி நாடக தயாரிப்பாளராக இருந்தவர் கண்டிப்புக்கு பேர்போன சானா அவர்கள். அவரது நாடகத்தயாரிப்பு முறைபற்றி பின்னர் குறிப்பிடுகிறேன். அவரிடம் பிரதி ஒன்றுக்கு அங்கீகாரம் பெறுவதே சிரமமான காரியம். அதற்குமுதல் அவரிடம் என்னனைப் போன்ற கற்றுக்குட்டியின் படைப்பு போய்ச் சேரவேண்டுமே. சானாவின் 'சாணக்கியன்' போன்ற மேடைநாடகங்களிலும், வானொலி நாடகங்களிலும் நடிப்பவராதலால் ராஜேஸ்வரன் மூலம் இந்தப்பிரதியை சானாவுக்கு அனுப்புவது எனக்கு சரியானதாகப்பட்டது.

நானும் அவரும் வேலையிடத்தில் அருகருகில் மேசைகளில் இருந்தோம்.. அந்தப்பிரதியை திரும்ப திரும்ப வெட்டித்திருத்தி எழுதிக்கொண்டிருந்தேன். எதையோ எழுதுவதும், எனக்குள் சிரித்துக்கொள்வதையும் பார்த்த அவர் 'என்ன எழுதுகிறீர்' என்று கேட்கவும், இதற்காகவே காத்திருந்தவன் போல பிரதியை அவரிடம் கொடுத்தேன். அவருக்கு நன்றாகப் பிடித்து விட்டது. அதே வேகத்தில் சானாவிடம் கொடுத்து பலத்த சிபார்சும் செய்திருக்கவேண்டும்.

சானா அப்போது 'மத்தாப்பு' என்ற கதம்ப நிகழ்ச்சியைத் தயாரித்துக்கொண்டிருந்தார். ஆறாம் இலக்க கலையகத்தில் ஏறக்குறைய 75, 80 பார்வையாளர்களுக்கு முன்னிலையில் ஒவ்வொரு மாதத்திலும் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஒலிப்பதிவு நடைபெறும். தொலைக்காட்சி வராத காலம் அது. புகழ்பெற்ற வானொலிக்கலைஞர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் இது என்பதால் நேயர்கள் இந்நிகழ்ச்சிக்கான அனுமதிப்பத்திரத்தை வேண்டிப்பெற்று தவறாமல் வருவார்கள். அந்த நேரத்தில் வானொலி நிலையத்தையும் சுற்றிப்பார்த்துக்கொள்ள அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பண்டா ஆறுமுகம், றொசாயிரொ பீரிஸ், ஆனந்தி சூர்யப்பிரகாஷ; (பின்னர் லண்டன் பிபிசியில் குரல்கொடுத்த அவரேதான்), ராசேஸ்வரி சண்முகம், ராஜம் ராஜன், எஸ். எஸ். கணேசபிள்ளை, ரி. ராஜேஸ்வரன், கே. மார்க்கண்டன், என். பி. தர்மலிங்கம், ரி.வி. பிச்சையப்பா, தாசன் பெர்னாண்டோ எம். விக்டர் முதலானவர்கள் மேடையில் தோன்றி குட்டிநாடகங்களில் நடித்து பார்வையாளர்களை சிரிக்கவைப்பார்கள். பார்வையாளர்களின் சிரிப்பும், கரகோஷமும் நிகழ்ச்சியுடன் சேர்ந்து ஒலிப்பதிவாகும். தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் பத்து மணிக்கு 'மத்தாப்பு' ஒலிபரப்பாகும்: போது நாடு பூராவும் மக்கள் காத்திருந்து கேட்பார்கள்.

அந்த நிகழ்ச்சியில் எனது பிரதி சேர்க்கப்பட இருப்பதாக கடிதம் வந்தது. கூரையில் எட்டித் தட்டும் சந்தோசம் எனக்கு. 1969 ஆகஸ்ற் 27ந்திகதி. என். பி தர்மலிங்கம் என்ற அனுபவம் வாய்ந்த நடிகர் எனது பிரதியில் நன்றாகவே நடித்தார். பேட்டி கண்டவர் யார் என்று நினைக்கிறீர்கள் ? சானாவேதான்.
அதற்குப் பிறகு என் காட்டில் மழைதான். தொடர்ந்து 'மத்தாப்பு' நிகழ்ச்சிகளுக்கு குட்டிநாடகங்களாக எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு ஒலிப்பதிவுக்கு எட்டு குட்டி நாடகங்கள் சேர்த்துக்கொள்வார்கள். சானா என்னுடைய முதல் நாடகப்பிரதிக்குப் பிறகு என்னுடைய பிரதிகளில்; மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

ஒரு முறை ஒலிப்பதிவுக்கு முதல்நாள் என்னை நாவலவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்த சானா, அடுத்த நாள் ஒலிப்பதிவுக்கு கிடைத்த பிரதிகள் எதிர்;பார்த்த அளவிற்கு நன்றாக இல்லையென்று, என்னால் உடனடியாக எத்தனை பிரதிகள் எழுதமுடியுமென்றாலும் எழுதித்தரும்படி கேட்டார். நான் இருந்த பொறளை வீட்டின் மொட்டை மாடியில் ( முற்றுப்பெறாமல் இருந்த மேல்பாகத்தில் );, ஒரெயொரு பல்பின் வெளிச்சத்தில் கதிரையைப் போட்டு, ஐந்தாவது நாடகத்தை எழுதிமுடிக்க, பொழுத விடிய ஆயத்தமாகியிருந்தது. குளித்து விட்டு அப்படியே புறப்பட்டு சானாவிடம் ஐந்து பிரதிகளையும் இலங்கை வானொலியில் வைத்து கொடுத்துவிட்டு நித்திரைக் கலக்கத்தடன் வேலைக்குப் போய்ச்சேர்ந்தேன். அவை எல்லாமே ஒலிப்பதிவின்போது நன்றாக வந்ததில் சானாவுக்கும் எனக்கும் சந்தோசந்தான்.

இந்தநாட்களில் வானொலிக்கு தமிழ் பகுதிநேர அறிவிப்பாளர்களை தேர்வு செய்யப்போவதாக அறிவித்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். இலங்கை வானொலியில் அப்போது சிறுவர்மலர் காலத்திலிருந்தே நடிக்கத்தொடங்கிய பலர் இருந்தார்கள். வானொலி நிலையத்துடனான நீண்டநாள் தொடர்பு அவர்களுக்கு அனுகூலமாகவே இருந்தது. வானொலி நிலைய நிர்வாகிகள், மூத்த அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும்; அவர்களைத் தெரிந்திருந்தது. மாமா, மாமி என்று சர்வசாதாரணமாக அவர்களை அழைப்பார்கள். எங்களுக்கு அது சற்று ஆச்சர்யமாகக்கூட இருக்கும். நடிகர்களாகவோ, அறிவிப்பாளர்களாகவோ வருவதில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைத்தது. இதில் தவறு ஒன்றுமில்லை. பின்னாளில் அரசியல் பூச்சுக்களுடன் யார் யாரோவெல்லாமோ அறிவிப்பாளர்களாக வந்தார்கள். அதைவிட இது எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்.. (தொடரும்)