Saturday, May 10, 2008

அது ஒரு விளையாட்டுக் காலம்

"The next Thing most like living one’s Life over again, seems to be a Recollection of that Life; and to make that Recollection as durable as possible, the putting it down in Writing." -The Autobiography of Benjamin Franklin


படிக்கும் காலத்தில் நான் ஒன்றும் பெரிய விளையாட்டு வீரனாக ஒன்றும் இருக்கவில்லை. ஆனால் பத்தோடு பதினொன்று என்றும் இல்லை. ஒல்லியான உடம்புடன் அனேகமான ஒட்டப்போட்டிகளிலும் பங்குபற்றுவேன். 100 யார், 220 யார், 440 யார் - அதுக்கு மேல் உடம்பு தாங்காது.

100 யார், 220 யார் ஓட்டத்தில் மூன்றாவது இடம் நிச்சயம். 440 யார் ஓட்டத்தில் இரண்டாவது இடம் அனேகமாகக் கிடைக்கும். ஒருமுறை முதலாவதாக வந்தவர் பாதை மாறி ஓடி, விலக்கப்பட இரண்டாவதாக வந்த எனக்கு முதலிடமும் கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த சந்தோசத்தை என்னால் வெளிப்படையாக கொண்டாட முடியவில்லை. காரணம் விலக்கப்பட்டவரும் (வரதன் அவரது பெயர் - கனடாவில்தான் இருக்கிறார்) என்னுடைய மஞ்சள் இல்லத்தை சேர்ந்தவர். அவரும் நானும் முதலாம் இரண்டாம் இடங்களில் வந்திருந்தால் 5 + 3 = 8 புள்ளிகள் எங்கள் இல்லத்துக்கு கிடைத்திருக்கும். இது என்னால் 5 புள்ளிகள் மட்டும் கிடைத்ததால் எங்கள் இல்லக்காரர்கள் என்னை கோபத்துடனேயே பார்ப்பதாகப் பட்டது. முக்கியமாக இரட்டைப் பின்னல்காரர்கள் அப்படிப் பார்த்ததுதான் பெரும் கவலையாக இருந்தது.

தொடர்ந்து கோயில் வடக்குவீதியில் யாடு (தாச்சி) விளையாடுதல், கிட்டி அடித்தல், கொடியோட்டம், றவுண்டர்ஸ்(பேஸ்போல் விளையாட்டின் ஒரு வடிவம்) என்றெல்லாம் விளையாடிக்கொண்டிருந்தோம்.

பிறகு எப்படியோ கிரிக்கெட் மோகம் எங்களை பிடித்துக் கொண்டது. அறுவடை முடிந்த அத்துளு வயலுக்குள் கிரிக்கெற் விளையாடத் தொடங்கினோம். கரடுமுரடான வயலுக்குள் விழுந்து கால்களை சிராய்த்துக் கொண்டும் விடாமல் விளையாடினோம். திடீரென்று என்னை கப்டனாக்கி விட்டர்கள். ஏன் அப்படிச்செயதார்கள் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது.

அண்டை அயல் ஊர்க்கரர்களோடு மாட்ச் நாங்களே கேட்டு விளையாடினோம். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்க தூரத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இடம் தொண்டைமானாறு. 8, 10 சைக்கிள்களில் பூவரசம்தடி விக்கற்றுக்களுடன், மரக்காலையில் மன்றாடிச் செய்வித்த துடுப்புடன் (Bat), டென்னிஸ் பந்துடன் புறப்பட்டோம்.

நாங்கள் விளையாடப்போகும் அணியின் தலைவர், அப்போது ஹாட்லிக்கல்லூரியின் அணியில் விளையாடுபவர் (அதுவும் லெதர் பந்தில் விளையாடுபவர்) என்று அறிந்ததும் சற்று தடுமாறித்தான் விட்டோம்.

நாங்கள் விளையாடிய இடம் - தொண்டைமானாறு பாலத்திற்கு அப்பால், சுற்றிவர கல்வேலி அமைத்த தென்னம்காணி - சற்று தள்ளி கடல் இருந்ததுபோல ஞாபகம்.

என்ன அதிசயமோ, அன்று நான் Captain's Game விளையாடினேன். துடுப்பெடுத்து ஆடும்போது, மூசி,மூசி அடித்தேன். பந்து தானாக வந்து என் துடுப்பில் பட்டு பறந்தது. நிறைய காட்ச்ம் பிடித்தேன். முடிவில் எங்களுக்கு வெற்றி. சந்தோசம் என்றால் சந்தோசம்.

கூச்சல் ஒன்றும் போடவில்லை. காரணம் அவர்கள் ஊரில் வைத்து சாத்திவிடுவார்களோ (கதவை அல்ல - முதுகில்தான்)என்ற பயந்தான். தொண்டமானாறு பாலத்தடி சந்தியில் , கொம்பனி கணக்கில் (எல்லோரும் காசு போட்டு) வடை சாப்பிட்டு, தேனீர் குடிக்கும்போது, வானொலியில் சொன்னார்கள். நாதஸ்வரவித்வான் காருகுறிச்சி அருணசலம் இறந்துவிட்டார் என்று. அனேகமாக நாங்கள் எல்லோருமே நெல்லியடி லட்சுமி தியேட்டரில் ஜெமினி, சாவித்திரி, கமலா லட்சுமண் நடித்த "கொஞ்சும் சலங்கை" பார்த்திருக்கிறோம். அதில் அவர்தான் ஜெமினிக்காக நாதஸ்வரம் வாசித்தவர் என்றும் எங்களுக்குத் தெரியும். இதைவிட வல்லிபுரக்கோயில் கடல் தீர்த்தத் திருவிழாவிலும், நெல்லியடியில் கே.சீ.நடராஜா வீட்டுத்திருமணத்திலும் அவர் வாசித்ததை நேரில் கேட்டிருக்கிறேன். சட்டென்று கவலை வந்துவிட்டது. அவரைப்பற்றியும், "கொஞ்சும் சலங்கை" படத்தைப்பற்றியும் கதைத்துக் கொண்டு வீடு வந்துசேர்ந்தோம்.

தொடர்ந்து உடுப்பிட்டியில் நடைபெற்ற ஒரு போட்டியில் நாங்கள் செமையாக வாங்கிக்கட்டியதோடு எங்கள் அணியின் உற்சாகம் குறைந்துகொண்டேபோய் இறுதியில் கலைக்கப்பட்டது.

இருந்தாலும் கிறிக்கெட் மீதான எனது தனிப்பட்ட மோகம் குறையவில்லை. ஆங்கிலப்பத்திரிகைகள் வாயிலாகவும், வானொலி நேர்முகவர்ணனைகள் மூலமாகவும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெற் வீரர்களை எனது ஆதர்ச வீரர்களாக உருவகித்து வைத்திருந்தேன்.

Ceylon Daily Mirror என்ற பத்திரிகை 1961ல் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பித்த்து. 10 சதம்தான் விலை. கையடக்கமான சைஸ். நெல்லியடி லக்ஸ்மி ஸ்ரோர்ஸில் அதன் முதல் வாசகன் நானாகத்தான் இருப்பேன். மகன் ஆங்கிலப்பேப்பர் வாசிக்கிறான் என்பது வீட்டுக்காரருக்கும் சந்தோசமாகப் பட்டது. அதில் வரும் கிரிக்கெற் செய்திகளையே நான் விழுந்து விழுந்து வாசித்தேன்.

Ken Barrington, Colin Cowdrey, Peter May, Ted Dexter போன்ற இங்கிலாந்து வீரர்களும், Gary Sobers, Rohan Kanhai, Wesley Hall, Frank Worrell, Condrad Hunte போன்ற மேற்கிந்திய வீரர்களும், Richie Benaud, Bill Lawry, Bob Simpson போன்ற ஆஸ்திரேலிய வீரர்களும் எனக்கு ஆதர்சத்துக்கு உரியவர்களாகினார்கள்.

எங்கள் ஊர் விதானையார் நடு வீட்டில் இருந்த டிறான்ஸ்சிஸ்டர் ரேடியோவில் மணித்தியாலக் கணக்காக் இருந்து இங்கிலாந்தில் இருந்துவரும் ஆங்கில நேர்முகவர்ணனைகளை கேட்பேன்.( எனக்கு மட்டும் தான் விதானையார் வீட்டுக்குள்போக அனுமதி இருந்தது)

யாழ் மத்தியகல்லூரியில் படிக்கும் காலத்தில் யாழ் நூலகத்தில் இங்கிலாந்தில் இருந்துவரும் மிகமெல்லிய தாளில் அச்சிடப்படும் (விமானத்தில் அனுப்புவதற்கு வசதி என்று சொல்வார்கள்) இங்கிலாந்து பத்திரிகைகளின் கிரிக்கெற் பகுதியில் County cricket விளையாடும் இலங்கையர்களின் ஸ்கோர் விபரங்களை கவனமாக கொப்பியில் குறித்துக்கொள்ளுவேன். Clive Inman, Stanley Jayasinghe, Laddie Outscorn, Dan Piachaud, Gamini Gunasena இப்ப்டிப்பலர் விளையாடினார்கள்.

இந்த கிரிக்கெற் பின்னணியுடன் தான் வேலை கிடைத்தபின் கொழும்புக்கு வந்தேன்.

இந்த கட்டிடத்திற்கு பின்னால்தான் ஆரம்பத்தில் உள்நாட்டு இறைவரித்திணக்களம் இருந்தது.


நான் இறைவரித்திணைக்களத்தில் சேர்ந்தபொழுது எனக்கு 22 வயதாக மூன்று மாதங்கள் இருந்தன. நிறையத் தமிழ் ஆட்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள துன்னாலை, பருத்தித்துறை, புலோலி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி என்று வடமராட்சிக்காரர்கள் பலர் அங்கு ஆட்சி ந்டத்திக் கொண்டிருந்தார்கள். எங்கள் திணைக்களத்தின் ஆணையாளர் கூட சிற்றம்பலம் என்ற தமிழர்தான்.

சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் எனக்கு ஒரு முறை சொன்னார் -
“தம்பி கிளறிக்கல் (அரசாங்க எழுதுவினைஞர்கள்) என்பவர்கள்; ஒரு தனிச்சாதியினர். அவர்களுக்குள் இருந்து கொண்டு நீ இப்படி எழுத்தென்றும் நாடகமென்றும் சிந்திக்கத் தலைப்படுவதே பெரிய விசயம ;.”

இதை நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அக்கால அரசாங்க ஊழியர்கள் அனேகமானோர் ஓவர்ரைம் செய்வது, சனி, ஞாயிற்றுக்கிpழமைகளோடு எத்தனை நாட்கள் லீவு எடுத்தால் எத்தனை நாட்கள் மொத்தமாக ஊரில் நிற்கலாம் என்பது போன்ற ஏக சிந்தனையாளர்களாக இருந்தார்கள். அதாவது எஸ்.பொ வின் சடங்கு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரம் போலச் செயல்பட்டார்கள். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அத்தோடு இந்த தத்துவம் எனக்கு உடன்பாடானதாக இருக்கவுமில்லை..

எல்லோருடனும் சகஜமாகப் பழகவும், விளையாட்டு, நாடகம், பொதுவேலைகள் யாவற்றிலும் பங்குபற்றுவதும் எனக்கு மிகவும் பிரியமானதாகப் பட்டது. என்னைப் போன்ற தன்மையுடைய ஒருவரை சக ஊழியர்களுக்கிடையில் தேடினேன்.

இந்தநேரத்தில் எங்கள் திணைக்கள விளையாட்டு மன்ற நிர்வாகத்தில் இணைந்து கொள்ளுமாறு அப்போதைய செயலாளரான செல்வி. டல்சி முனசிங்க என்னை அழைத்தார். மிகப் புதியவனான என்னை தடகளப்போட்டிகளுக்கான செயலாள்ராகவும், கிரிக்கெட்டில் உதவிச்செயலாளராகவும் தெரிவு செய்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு சென்ற பொழுது எம்மவர்கள் என்று ஒரே ஒருவரைத்தான் அங்கு சந்தித்தேன். அவர்தான் ரங்கா என்ற ஸ்ரீரங்கநாதன்.

எந்த விளையாட்டு என்றாலும் இவர் பெயர் எங்கள் திணைக்கள பட்டியலில் இடம் பிடிக்கும். கிரிக்கெற் விளையாட்டில் இவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். உதைபந்தாட்டம், ஹொக்கி, டேபிள் டென்னிஸ், பாட்மின்டன் என்று எதையுமே இவர் விட்டு வைக்கவில்லை. இளம் வயதான என்னையும் அந்த விளையாட்டுகள் எல்லாவற்றிலும் இவர் இழுத்துவிட்டார். ஆனால் எதிலுமே நான் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் வாழ்க்கையின் சுவையான அனுபவங்களை அந்த தொடர்புகளின் முலம் நான் பெற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்கள் என்னைப் பண்படுத்தியிருக்கின்றன.



உள்நாட்டு இறைவரிக் கிரிக்கற் குழு 1969/1970



நிற்ப்பவர்கள் (இ-வ)1.(தெரியவில்லை) 2. ரி.எல்.வி. பெரெரா 3. காமினி குணவர்த்தன, 4. (தெரியவில்லை) 5. (தெரியவில்லை) 6. சந்திரபால (உதவியாளர்) 7.ஆனந்த 8. தர்மவன்ச 9. மேர்வின் வீரசூரியா

கதிரையில் இருப்பவர்கள் (இ-வ) திஸ்ஸ ஜெய்சிங்க, ஜே. ஏ. ஆர். பீலிக்ஸ், கியூ மொலகொட (அணித்தலைவர்), டல்சி முனசிங்க (கிரிக்கெட் செயலாளர்), சேர்பாஞ்சி, ஜெகசோதி

முன்னே இருப்பவர்கள் (இ-வ) 1. காசி செட்டி, 2. பேர்சி அமரசிங்க 3. சிறில் அபயகூன் 4. ஸ்ரீரங்கநாதன், 5. சோமசுந்தரம், 6. கே. எஸ். பாலச்சந்திரன் (உதவி கிரிக்கெட் செயலாளர்)


றெயில்வே திணைக்கள மைதானத்தில் எங்கள் அணி அவர்களுக்கு எதிராக விளையாடி சாதனை புரிந்த மாட்ச்.. 447 மொத்த ஓட்டங்கள் எடுத்தோம்

நான் விமானப்படை மைதானத்திலும், சுகாதாரத் திணைக்கள மைதானத்திலுமாக இரண்டு மாட்ச்களில் எனது திணைக்களத்திற்காக விளையாடினேன்.

ஸ்ரீரங்கநாதனின் உதவியுடன் ஹொக்கி, உதைபந்தாட்டம், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களில் எல்லாம் பங்குபற்றினேன்.

பொலிஸ் விளையாட்டு அரங்கில் நடந்த ஒரு ஹொக்கிப்போட்டியில் நான் கோல்கீப்பராகவும் (ஸ்ரீரங்கநாதன் விளையாடாத காரணத்தால்) விளையாடியிருக்கிறேன்.

(துக்கமான செய்தி - டல்சி முனசிங்க சென்ற 18ந்திகதி ஜூன் மாதம் 2008 காலமாகி விட்டார்)