Monday, March 5, 2007

வானொலிக்கால நினைவுகள் - 2


நான் வேலையில் சேர்ந்தபோதே வானொலியுடன் தொடர்பு உள்ளவர்கள் எனது திணக்களத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா?
அதில் ஒருவர் "செய்திகள் வாசிப்பவர் எஸ். நடராஜன்" என்று கம்பீரமாக, அட்சரசுத்ததுடன் சொல்வதினால் பலருக்கு அறிமுகமானவர். உலகத்தில் நடக்கின்ற செய்திகளையெல்லாம் தினமும் சொல்லும் அவர் வேலை செய்யும் இடத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். அனாவசியமாக வாய் திறக்கவே மாட்டார்.

என்னுடைய வானொலித் தாகத்தை தெரிந்த நண்பன் ஒருவன் "அவர் வானொலியில் இளஞர்களுக்காக " குதூகலம்" என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார், சந்தர்ப்பம் கேட்டுப்பார்" என்று தூண்டி விட்டான். நானும் சந்தர்ப்பம் கேட்பதற்கான நல்ல சந்தர்ப்பத்தை பார்த்துக் காத்திருந்தேன். நாட்களும் கழிந்து போயின.

"இப்படியே போனால் வயோதிபர் பங்குபற்றும் "முதியோர் வேளை"யில் தான் பங்குபற்றப் போகிறாய்.. " என்று நண்பன் அறிவுறுத்தலும் தந்தாகி விட்டது. என் அம்மா என்னைப் பார்த்து அடிக்கடி சொல்வதும் ஞாபகத்திற்கு வந்தது. "நீ எல்லாத்துக்கும் 'ஆசனப்பகுதியிலை' வெள்ளம் படுமட்டும் பார்த்துக்கொண்டிருப்பாய்.."
(ஆசனப்பகுதி என்ற சொல்லுக்கான புழக்கத்திலுள்ள சொல் பண்பு கருதி தவிர்க்கப்பட்டுள்ளது)

கடைசி கடைசியாக மரணயோகம் இல்லாத ஒரு சுபமுகூர்த்தவேளையில் (அப்படியாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் எங்கள் நேயர்களின் அபிமானத்தைப் பெறும் பாக்கியம் எனக்கு கிட்டியிருக்குமா ?) நான் அவரை அணுகி என் விருப்பத்தை தெரிவித்தேன்.

அவர் நான் எதிர்பார்த்தது மாதிரி பீடிகை ஒன்றும் போடாமல் ( நடிக்க வரும்போது பற்கள் சுத்தமாக தீட்டப்பட்டிருக்க வேண்டும். தலை ஒழுங்காக சீவப்பட்டிருக்கவேண்டும். ஒலிப்பதிவின் போது இரண்டு தரத்துக்கு மேல் செருமக்கூடாது. இந்தமாதிரி பீடிகைகள் இல்லாமல் ) வெகு சாதாரணமாக "வருகிற ஞாயிற்றுக்கிழமை, "குதூகலம்" ஒலிப்பதிவுக்கு வாரும்" என்று சொல்லி விட்டார்.

பிறகென்ன.. பிறந்ததின் பயனை அன்றே பெற்றதுமாதிரி ஒரே குதூகலந்தான். இலங்கை முழுவதும், ஏன் அதற்குமப்பாலும் என் குரல் ஒலிக்கப் போகின்றதே என்ற சந்தோசந்தான். அரசியல் தலைவர்கள்/தலைவிகள் காலில் விழும் மூத்த/குட்டி அரசியல்வாதிகளைப் போல, "நடராஜனின்" காலில் விழுந்திருப்பேன். ஆனால் அவரது மேசையைச் சுற்றி அடுக்கப்பட்டிருந்த வருமானவரிக் கோப்புகளினால் ( Income Tax Files) அவரது கால்கள் எனக்குத் தெரியவில்லை. எனவே "தாங்ஸ்" என்ற சுத்தமான தமிழில் நன்றி சொல்லி விட்டுப் புறப்பட்டேன்.

அவர் ஒலிப்பதிவுக்கு வரச்சொன்ன நாள் 1967 ஆகஸ்ட் 13ந் திகதி. பதின்மூன்று தான் சற்று உதைக்கிறமாதிரி இருந்தது. ( மகா அலெக்ஸாந்தர் தான் கடவுள் என்பதாக தன் தலைந்கரில் இருந்த சிலைகளோடு 13வது சிலையாக தன்சிலையை நிறுவினானாம். ஆனால் அவன் உடனேயே இறந்துபோக, 13 அதிஷ்டமற்ற எண்ணாகக் கருதப்பட்டது என்கிறார்கள்). இருந்தாலும் இதையெல்லாம் பார்க்கமுடியுமா?

"குதுகலம்" தயாரிப்பாளர் குறிப்பிட்ட நேரத்துக்கு, "டாண்" என்று இலங்கை வானொலியின் வரவேற்புக்கூடத்தில் ஆஜரானேன். ( நான் நடிக்கப்புறப்பட்டதினாலோ என்னவோ அந்த ஆண்டே, 1967 செப்டெம்பர் 30ந்திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்று பெயர் மாற்றி வைத்துக் கொண்டார்கள். என் ராசி அப்படி.)

நான் இருந்த கூடத்தின் பெயரில் இருந்த "வரவேற்பு" , நேரில் இருப்பதாகத் தெரியவில்லை. நான் பார்த்துக் கொண்டே இருக்க, யார், யாரோவெல்லாம் உள்ளே போனார்கள். வெளியே வந்தார்கள். " இவர் அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ " என்று தெரிந்த "வானொலிப் பிரபலங்களை" நினத்துக் கொண்டேன். ஆனால் என் பக்கம் பார்த்தவர்களும் "யார் இந்த அற்பப் பதர்" என்பது போல பார்ப்பதாக எனக்குப்பட்டது. " இருங்கள்..இருங்கள்.. எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் தானே." என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டேன்.

நேரம் கடந்து போய், "என் வானொலிக்கனவுகள்.. அவ்வளவுதான்" என்று நினைத்தவேளையில், "நடராஜன்" தரிசனம் கொடுத்தார். " என்ன இங்கையா இருக்கிறீர்.. உமக்கு தந்த அனுமதி துண்டைக் காட்டி விட்டு உள்ளே வந்திருக்கலாமே " என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார். பின்தொடர்ந்தேன். வழி, வழியே ஒலிப்பதிவு அறைகள். சிலவற்றின் முன்னே ஒளிரும் "சிவப்பு" வெளிச்சங்கள். அது ஒலிப்பதிவு நடந்து கொண்டிருப்பதற்கான அடையாளம் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.

நேராக வந்து ஆறாம் இலக்க கலையகத்தின் முன்னால் நின்றோம். ( இதை இப்போது
" குமாரதுங்க முனிதாச கலையகம்" என்று பெயர் மாற்றி விட்டார்கள் என்று நினக்கிறேன். என் ராசிதான்.) உள்ளே போக அடுத்து அடுத்து இரண்டு கதவுகள். ஒன்றை வெளியே இழுத்து, மற்றதை உள்ளே மகா பிரயத்தனத்துடன் தள்ளி நுழையவேண்டும். வெளியிலிருந்து உள்ளே ஒலி கசிந்து விடாமலிருக்க இந்த ஏற்பாடு என்று அறிந்து கொண்டேன். வானொலித்துறையில் நுழைவது எவ்வளவு சிரமமானது என்பதை இது எனக்கு சூசகமாக உணர்த்தியது.

"அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படத்தில் வருகிறமாதிரி, "திறந்திடு சிசேம்" என்றவுடன் திறக்கின்ற கதவுகளாகவிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒருமாதிரி கதவைத் திறந்து உள்ளே போனால், ஆறு அங்குல உயரமான மனிதர்கள் வாழும் லில்லிபுட் நாட்டில் கரையொதுங்கிய கலிவரைப் போல இருந்தேன். "குதூகலம்" நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்திருந்தவர்கள் எல்லோருமே என்னைவிட சிறியவர்கள் என்று விளக்க அப்படிச் சொன்னேன்.

ஏறக்குறைய 17, 18 வயதுடைய அவர்கள் மத்தியில் 23 அகவை உடைய நான் போய் நின்றதும், கைகளில் வைத்திருந்த பிரதிகளில் இருந்து கண்களை எடுத்துக் கொண்டு என்னை அவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். தயாரிப்பாளர் நடராஜன் எனக்கு ஒரு பிரதியை கொடுக்கச் சொல்லவும், அவர்களில் ஒருவர் எனக்கு ஒரு பிரதியைத் தந்தார். மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அது ஒரு குட்டி நாடகம். அதன் பெயர் "இப்படி நடந்தால்".

ஒருவாறு நடித்து ஒலிப்பதிவும் முடிந்துவிட்டது. வானொலி நிலையத்தின் ஒலிவாங்கியுடன் நான் அதற்கிடையில் ஒருமாதிரி சிநேகமாய் விட்டேன். அன்று ஆரம்பித்த நட்பு..ம்..எவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்தது.

அந்த மாதமே 29ந்திகதி என் நாடகம் ஒலிபரப்பாகும் என்று சொன்னார்கள். 15 நாட்கள் அவகாசத்திற்கிடையில் பல கடிதங்கள் - என் வீட்டுக்கு, பின்னர் மனைவியாக வந்த என் காதலிக்கு, ஊரில் இருக்கும் என் ந்ண்பர்களுக்கு என்று எழுதித் தள்ளினேன்.

ஒரே ஒருவரைத்தவிர (யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்) மற்றவர்கள் யாருமே பதில் கடிதம் என்ன, போஸ்ட் கார்ட் கூடப் போடவில்லை. இத்தனைக்கும் அப்போது முத்திரைசெலவு பதினைந்து சதந்தான்.

வந்த கடிதமும், " என்றும் என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் உங்களுக்கு" என்று ஆரம்பித்து, " எங்கள் வீட்டு ஆடு இரண்டு குட்டிகள் போட்டிருக்கிறது.. காற்றோடு மழை அடித்து எங்கள் வீட்டுக்கு அருகில் நின்ற கிழுவை மரக்கொப்பு முறிந்து விழுந்து வீட்டின் இரண்டு ஓடுகள் உடைந்து போச்சு.. என்ற மாதிரி தகவல்களுக்கிடையில், பிடிக்காத சங்கீத வித்வானைப் பற்றி விமர்சகர் சுப்புடு எழுதும் கறாரான வரியைப் போல, போகிற போக்கில் எழுதப்பட்டிருந்தது. ஒரு வரி. "உங்கள் நாடகம் கேட்டேன்"

நான் அப்போது தெஹிவளையில் ஒரு வீட்டின் முன் அறையில் இருந்தேன். வீட்டுச்சொந்தக்காரர் ஒரு டென்னிஸ் விளையாட்டுக்காரர். (நான் நினைப்பது சரியென்றால் அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன் சுரேஷ் தான், பிற்காலத்தில் இலங்கையின் சார்பாக சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டவர். இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவராக இருந்த சுரேஷ் சுப்பிரமணியம் அவர்தான்.) எனது நாடகத்தைப் பற்றி வீட்டுக்காரருக்கு சொல்லி வைக்கவும், அவர் ஒலிபரப்பான அன்று எனக்காக தங்கள் வானொலியின் ஒலியைக் கூட்டிவைத்து தானும் என்னோடு இருந்து கேட்டு, "நல்லாயிருக்கிறது" என்று சொல்லி வைத்தார். என் முதல் விமர்சகர் அவர்தான்.

அதற்கு பிறகு ஒரு வருடத்திற்கிடையில் - ஆள் மாறாட்டம், சேறும் சகதியும், உறவும் பிரிவும், பதினையாயிரம், காலம் கடந்த காதல், காதல் இன்றேல் சாதல், எனக்கு அவள் வேண்டாம் என்றாகி விட்டது. அதிகமாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.

இவையெல்லாம் நான் "குதூகலத்தில்" நடித்த குட்டி நாடகங்கள்.














என்ன தான் குட்டிநாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், கனவு என்னவோ தேசிய சேவை, வர்த்தகசேவை நாடகங்களில் நடிப்பது பற்றியதாகவே இருந்தது. அப்போதுதானே வானொலி நடிகன் என்ற அந்தஸ்து கிடைக்கும். அதற்கான நேர்முகம் (Audition) வெகுவிரைவில் வரப்போகிறது என்று சொல்லிக்கொண்டார்கள்.


இதற்கான பயிற்சி மேலும் எடுக்கவேண்டும் என்று எனக்கு தெரிந்திருந்தது. கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டேன். தெளிவாக சொற்களை உச்சரிக்கும் பாங்கு கைவ்ர வேண்டுமென்றால் கவிதைகளை உரத்து வாய் விட்டுப்படிக்க வேண்டும். உரைச்சித்திரங்களை நிதானமாக பொருள் விளங்க வாசிக்க வேண்டும். கவிஞர் காசி ஆனந்தன் அப்போது "இளைஞர் மன்றம்" நிகழ்ச்சியை தயாரித்தார். அங்கே கவிதை, உரைச்சித்திரம் வாசிப்பதே என் மூச்சாகியது.






(இன்னும் இருக்கிறது)

No comments: