Saturday, March 10, 2007

வானொலிக்கால நினைவுகள் - 5


காவலூர் இராசதுரை அண்ணர் அக்காலத்தில் பிரபலமான 'லிப்டன் லாவொஜி' என்ற தேயிலைக்கான விளம்பர நிகழ்ச்சியாக 'துப்பறியும் லாவோஜி' என்ற ஒரு தொடர்நாடகத்தை எழுதி வந்தார். அதில் முக்கிய பாத்திரத்தில் 'பண்டா' ஆறுமுகம் நடித்தார். ( பண்டா என்பது அவர் நடித்த புகழ்பெற்ற பாத்திரத்தின் பெயர்) அதில் என்னையும் நடிக்க வைத்தார்.

கூட நடித்தவர்களில் என் ஞாபகத்திற்க வருபவர்கள், பாடகிகளான இரண்டு சகோதரிகள். மூத்தவர் கோகிலவர்த்தனி சுப்பிரமணியம் (சிவராஜா) பின்னாளில் அறிவிப்பாளராகவும் இருந்தவர்.– தங்கை சுபத்திரா சுப்பிரமணியம் (சந்திரமோகன்) பல மெல்லிசைப்பாடல்களை அக்காவுடன் பாடியவர்.

இத்தொடரைத் தயாரித்தது International Advertising Services என்ற வெளிநாட்டு விளம்பர நிறுவனம் - நடித்து முடிந்தவுடன் 'டாண்' என்று பணம் தருவார்கள். இலங்கை வானொலியின் தேர்வு செய்யப்பட்ட கலைஞனாக நான் வருவதற்கு முன்னரே வர்த்தக சேவையில் நடிக்கவும் அதற்கான ஊதியம்; பெறவும் வைத்தார் காவலூரார். என் வானொலிப்பிரவேசத்திற்கு கால்கோள் இட்டவர்களில் மிகமுக்கியமான ஒருவர், காவலூர் இராசதுரை அண்ணர்தான்.

தற்போது அவுஸ்திரெலியாவில் வாழும் அவர் 'விளம்பரக்கலை' என்று நூல் ஒன்று எழுதி வெளியிட்டிருப்பதாக அறிகிறேன். அண்மையில் அங்கு பவள விழாக்கொண்டாடிய அவரை நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

1971ம் ஆண்டில் நடந்த மிகமுக்கியமான நிகழ்வு. தேசிய சேவைக்கான நாடக நடிகர் தேர்வு நடந்ததும், நான் அதில் தெரிவு செய்யப்பட்டதும் தான்.

வர்த்தக சேவை நாடகங்களில் தயாரிப்பாளர் நினைத்தால் யாரையும் நடிக்க வைக்கலாம். ஆனால் தேசிய சேவை நாடகங்களில் தேர்வில் (Audition) தெரிவு செய்யப்பட்டவர்களே குரல் கொடுக்கலாம். குரல் கொடுக்கலாம் என்று நான் சொல்வதற்கு காரணமிருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் யாரோ இருமுவதாக இருந்தாலும் அதையும் யாரையும் கொண்டு இருமச்செய்ய முடியாது. ஒரு Auditioned நடிகர் வந்து இருமினால் சரி. இல்லாவிட்டால் இருமலை கைவிடவேண்டியது தான்.

இன்னும் ஒரு எழுதாத விதியும் இருந்தது. வர்த்தகசேவை நாடகங்களில் தொடர்ந்து நடிப்பவர்கள் அவர்கள் தேர்வு பெற்ற நடிகர்களாக இருந்தாலும், தேசிய சேவை நாடகங்களில் சந்தர்ப்பம் பெறுவது குறைவு. இந்த நிலையில் நடிகர் தேர்வு எவ்வளவு கடினமாக இருக்குமென்று ஊகித்துக் கொள்ளுங்கள்.

நடிகர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரி பல நாட்களாக வானொலியில அறிவிப்பார்கள். இலங்கை பூராவிலிருந்தும் விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் வரும். தேர்வு பல சுற்றுக்களாக, பல நாட்களாக நடைபெறும். ஆயிரங்கள் சில நூறுகளாக குறைக்கப்பட்டு, பின்னர் ஒரு நூறு, ஐம்பது, முப்பது என்று குறையும்.

எனவே ஒருவரே பல தடவைகள் தேர்வுக்கு போகவேண்டிவரும். தேர்வுக்கு போனவுடன் கையில் ஒரு கத்தைப்பேப்பரைத் தருவார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு நாடகத்தின் பகுதியோ அல்லது ஒரு உரைச்சித்திரத்தின் பகுதியோ இருக்கும். நாடகங்களும் ஒவ்வொரு பேச்சு வழக்கில், ஒவ்வொரு வகையானதாக இருக்கும். யாழ்ப்பாண பிராந்திய பேச்சு வழக்கு, மட்டக்களப்பு பிராந்திய வழக்கு, கவிதை நடை, செந்தமிழ் நடை என்று பலவகையாக இருக்கும்.

எங்கள் முறை வர ஓலிப்பதிவுக்கூடத்தின் ஒலிவாங்கிக்கு முன்னே கொண்டு சென்று நிறுத்தப்படுவோம். அடுத்த பக்கத்தில் இருக்கும் தேர்வாளர்கள் யார் என்று எங்களுக்கு தெரியாதவகையில், எங்களை அவர்கள் காண முடியாத வகையில் இடையிலுள்ள கண்ணடித்தடுப்பு மறைக்கப்பட்டிருக்கும். எங்கள் நடிப்புத்திறனைக் கேட்டு தாங்கமுடியாமல் அவர்கள் தங்கள் முகங்களை சுருக்கி, தலையை பிடித்துக்கொண்டு, சுவர்களில் மோதிக்கொள்ளப் போவதை நாங்கள் பார்க்காமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

'இலக்கத்தைச் சொல்லி விட்டு எட்டாம் பக்கத்தை வாசியும்' என்று அசரீரியாகக் குரல் கேட்கும். எச்சிலை விழுங்கி, வியர்க்கும் கைகளால் நடுங்கும் பேப்பர் கத்தையை விரித்து, கண்களால் மேய்ந்து, 'அடே மானிடப்பதரே.. இந்திரன் சபையில் வந்து இப்படிக் கூறும் உனக்கு ' என்று சொல்லத்தொடங்க, இடைமறித்து 'ஆறாம் பக்கத்தை வாசியும்' என்று அசரீரி சொல்லும். இப்படியே மாறி, மாறி அழுதும், சிரித்தும் நடித்துக்காட்டி, ''போய் வாரும்.. அறிவிக்கிறோம்' என்று ஒரு குரல் கேட்க – ' அப்பாடா..' என்று வெளியில் வர, இன்னுமொருவர் அந்த பேப்பர் கத்தையை வாங்கிக் கொண்டு உள்ளே போவதற்கு தயாராக நிற்பார்..

அவரைப்பார்க்க எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது.. ஒரு மகாராஜாவுக்கு பிடிக்காத பழம் யாராவது கொண்டு வந்தால், மகாராஜா அந்தப் பழத்தையே கொண்டுவந்தவரின் வாயில் திணித்து அனுப்பி விடுவாராம். அன்னாசிப்பழம் கொண்டு போனவருக்கு இந்தக்கதி நேர்ந்து அவர் நோவுடன் வெளியில் வரும்போது மகாராஜாவுக்கு கொடுப்பதற்கு ஒருவர் பலாப்பழத்துடன் நின்றாராம். அன்னாசிப்பழக்காரர் தன் நோவை மறந்து சிரிசிரியென்று சிரித்தாராம். அதை நினைத்து நான் சிரிக்கவும் புதியவர் மிரளமிரளப் பார்த்துக்கொண்டு உள்ளே சென்றார்.

சிலவாரங்களின் பின்னர் நான் வேலையில் இருந்தபோது 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்று பெயர் பொறித்த கடித உறையுடன் ஒரு கடிதம் வந்தது. தேர்வு பெற்றவர்களுக்குத்தான் கடிதம் வரும் என்று அறிந்திருந்ததினால் உள்ளே என்ன இருக்கும் என்று யூகித்தறிந்தேன். கொள்ளைச் சந்தோசம்.

எனது தலைமை எழுதுவினைஞராக இருந்தவர், என்மேல் மிகுந்த அன்பு கொண்ட ஒருவர். டட்லி மெண்டிஸ் என்ற அவர் கடிதத்தைத் தரும்போதே என்னை வாழ்த்தித் தரும்படி நான் கேட்டுக்கொண்டேன். அவர் அப்படியே தர நான் இரண்டு கையாலும் பெற்றுக்கொண்டேன். என்கூட வேலை பார்த்தவர்கள் ஆச்சர்யத்தடன் பார்த்தார்கள். பின்னர் எழுந்துவந்து வாழ்த்திச் சென்றார்கள். நான் வேலைபெற்று முதன்முதலில் நியமனப்பத்திரம் பெற்றபோது கூட இவ்வளவு சந்தோசம் அடையவில்லை.

No comments: